உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: குற்றவாளிகளுக்கு தண்டனை – தடுக்கத் தவறியவர்களுக்கு என்ன?
2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சதித்திட்டம் தீட்டியவர்கள் மற்றும் அதற்கு உதவி, ஆதரவு வழங்கியவர்களுக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில் திருப்தியடைவதாக கத்தோலிக்க சபை தெரிவித்துள்ளது.
பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டவர்கள் நீதிக்காக காத்திருந்த நிலையில், அவர்களுக்கு திருப்தியளிக்கும் வகையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
எனினும், இந்தத் தீர்ப்புடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் நிறைவடைந்துவிட்டதாகக் கருத முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தாக்குதலை பயன்படுத்தி அரசியல் அதிகாரத்தைப் பெற முயன்றதாகக் கூறப்படும் தரப்பினர் தொடர்பிலும் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், தாக்குதல் தொடர்பில் அதிகாரிகளுக்கு போதுமான தகவல்கள் கிடைத்திருந்த போதிலும், அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படாதமை குறித்தும் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.