அனோஜன் மரண தண்டனை மோடி தலையிட்டு காப்பாற்ற கோரி போராட்டம்!
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் இலங்கை தமிழ் இளைஞர் அனோஜன் சிவராசாவை விடுதலை செய்யக் கோரி, யாழ்ப்பாணம் நல்லூரில் இன்று அமைதியான கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
வடக்கு மாகாண ஐயப்ப இந்து இணையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தப் போராட்டம் நல்லை ஆதீனத்திற்கு முன்பாக ஆரம்பமாகி, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தை நோக்கி பேரணியாக முன்னெடுக்கப்பட்டது.
பின்னர், அனோஜனை காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறு கோரி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதற்கான கோரிக்கை மனுவும் இந்திய துணைத் தூதரகத்தில் கையளிக்கப்பட்டது.
கல்முனை அருகே உள்ள நட்பிட்டிமுனையைச் சேர்ந்த அனோஜன் சிவராசா, வேலைக்காக சுமார் 9 மாதங்களுக்கு முன்னர் சவூதி அரேபியா சென்றதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்ட மதத்தை அவமதிக்கும் வகையில் பதிவிட்டதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் அவருக்கு எதிராக சவூதியில் வழக்கு தொடரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
முதலில் அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 30 இலட்சம் சவூதி ரியால் அபராதம் விதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், பின்னர் தண்டனை மரண தண்டனையாக மாற்றப்பட்டதாக அவரது சட்டத்தரணி ரியாத்திலுள்ள இலங்கை தூதரகத்திற்கு அறிவித்ததாக கூறப்படுகிறது.
எனினும், மரண தண்டனை தொடர்பான எழுத்துப்பூர்வமான நீதிமன்றத் தீர்ப்பு இதுவரை இலங்கை அதிகாரிகளுக்கு கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுவதால், தண்டனை தொடர்பில் குழப்பம் நிலவுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சவூதி அரேபிய உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய முடியும் என அனோஜனின் சட்டத்தரணி தெரிவித்துள்ளதாகவும், அவரது குடும்பத்தினர், இலங்கை தூதரகம் மற்றும் வெளிவிவகார அமைச்சு இணைந்து மேல்முறையீட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம், ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள், முஸ்லிம் சமூக பிரதிநிதிகள், கிழக்கு மாகாண ஐயப்ப அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
போராட்டக்காரர்கள், இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இந்த விவகாரத்தில் தலையிட்டு அனோஜனை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.