வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்தப் பகுதி உருவாக்கம் - மீனவர்களுக்கு எச்சரிக்கை!
வங்காள விரிகுடாவின் அந்தமான் கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்தப் பகுதி உருவாகியுள்ளதாகவும், அது அடுத்த சில நாட்களில் மேலும் வலுப்பெறும் எனவும் வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
அதன் தாக்கத்தால், வங்காள விரிகுடா கடல் பகுதியில் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும்.
அதன்படி, மீன்பிடி மற்றும் கடல்சார் சமூகத்தினர் விழிப்புடன் இருக்குமாறும், எதிர்கால அறிவிப்புகள் மற்றும் முன்னறிவிப்புகளை உன்னிப்பாகக் கவனிக்குமாறும் வானிலை ஆய்வுத் துறை கேட்டுக்கொள்கிறது.
காங்கேசன்துறை முதல் புத்தளம் வரையிலும், கொழும்பு, காலி முதல் ஹம்பாந்தோட்டை வரையிலும் உள்ள கடலோரப் பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு திசையிலிருந்து காற்று வீசும் என்றும், காற்றின் வேகம் மணிக்கு சுமார் 30-40 கி.மீ. ஆக இருக்கலாம் என்றும் வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50-60 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும்.
மேலும், புத்தளத்திலிருந்து மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலான கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50 கி.மீ. வரை அதிகரிக்கக்கூடும்.
மேலும், கொழும்பு, காலி மற்றும் மாத்தறை வழியாக புத்தளத்திலிருந்து பொத்துவில் வரையிலான கடலோரப் பகுதிகளில், அக்கடல் பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாக இருப்பதோடு, சுமார் 2.0 - 2.5 மீட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் எழுவதற்கான சாத்தியக்கூறும் உள்ளது.