மன்னார் வைத்தியசாலையில் புதிய அவசர மற்றும் விபத்து சிகிச்சைப் பிரிவு – அடிக்கல் நாட்டப்பட்டது
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இந்திய அரசாங்கத்தின் 600 மில்லியன் ரூபா மானிய நிதியுதவியுடன் அமைக்கப்படவுள்ள நவீன அவசர மற்றும் விபத்து சிகிச்சைப் பிரிவுக்கான கட்டடத் தொகுதிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (16) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.
மன்னார் மாவட்ட மக்களுக்கு அவசர மற்றும் விபத்து நிலைமைகளில் துரிதமான மருத்துவ சிகிச்சையை வழங்கும் நோக்கில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
நிகழ்வின் விசேட அம்சமாக, ஜனாதிபதி தாமாக அடிக்கல் நாட்டாமல், இந்திய உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட குழுவினர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், வைத்தியர்கள் மற்றும் ஏனைய பிரதிநிதிகளைக் கொண்டு அடிக்கல் நாட்டச் செய்தார்.
நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், வடமாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன் உள்ளிட்ட அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நிகழ்வில் பங்கேற்றனர்.
மேலும், மன்னார் மாவட்ட நிர்வாக அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள், வைத்தியர்கள், தாதியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், மதத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
புதிய அவசர மற்றும் விபத்து சிகிச்சைப் பிரிவு அமைக்கப்பட்டதன் பின்னர், விபத்துகள் மற்றும் உயிருக்கு ஆபத்தான அவசர நிலைமைகளில் நோயாளிகளுக்கு துரிதமான மருத்துவ சிகிச்சை வழங்குவதற்கான வசதிகள் மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.