தாய்லாந்தில் இருந்து போதைப் பொருள் கடத்திய 2 இலங்கை பெண் வர்த்தகர்கள் கைது
சுமார் 5 கோடியே 37 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 'குஷ்' போதைப்பொருளை நாட்டுக்குள் கடத்த முற்பட்ட 2 இலங்கை பெண் வர்த்தகர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் குறித்த சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.
கைதானவர்கள் கொழும்பு, தெமட்டகொட மற்றும் தொட்டலங்க ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 33 மற்றும் 35 வயதுடைய இரண்டு பெண்கள் என தெரியவந்துள்ளது.
இவர்கள் தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்துஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் UL-403 ரக விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
சந்தேகநபர்கள் கொண்டு வந்த இரண்டு பயணப் பொதிகளில், 5 பொதிகளில் பொதியிடப்பட்டிருந்த 5 கிலோ 372 கிராம் எடையுள்ள 'குஷ்' போதைப்பொருளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 2 சந்தேகநபர்களும் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே