WHOவின் உயரிய பாராட்டு இலங்கைக்கு – பொது சுகாதாரத் துறையில் வரலாற்றுச் சாதனைகள்!
இலங்கையின் பொது சுகாதாரத் துறையில் எட்டப்பட்ட இரண்டு முக்கிய சாதனைகளைப் பாராட்டி, உலக சுகாதார அமைப்பு (WHO) இலங்கைக்கு விசேட உத்தியோகபூர்வ பாராட்டு சான்றிதழை வழங்கியுள்ளது.
திமோர்-லெஸ்தே தலைநகர் டிலியில் நடைபெற்ற WHO தென்கிழக்காசிய பிராந்தியக் குழுவின் 79ஆவது அமர்வின்போது இந்த பாராட்டு வழங்கப்பட்டது. WHO பணிப்பாளர் நாயகம் டாக்டர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரியேசஸ், சுகாதார அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் சான்றிதழை வழங்கினார்.
இலங்கை 2016ஆம் ஆண்டு மலேரியா அற்ற நாடாக WHOவால் அதிகாரப்பூர்வமாக சான்றளிக்கப்பட்டது. அதன் பின்னர் கடந்த 10 ஆண்டுகளாக நாட்டில் மலேரியா மீண்டும் பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகளை இலங்கை வெற்றிகரமாக முன்னெடுத்து வருகிறது.
அதேபோன்று, தாய்மார் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான டெட்டனஸ் நோயை ஒழித்த நிலையும் கடந்த 10 ஆண்டுகளாக இலங்கை வெற்றிகரமாகப் பேணி வருகிறது.
வலுவான ஆரம்ப சுகாதார கட்டமைப்பு, சிறந்த தடுப்பூசி திட்டங்கள், தொடர்ச்சியான தேசிய அர்ப்பணிப்பு மற்றும் திறமையான நோய் கண்காணிப்பு முறைகள் ஆகியவை இந்த சாதனைகளுக்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளதாக WHO தெரிவித்துள்ளது.
இந்த சாதனைகள் இலங்கையின் சுகாதாரத் துறையின் முக்கிய மைல்கற்களாக மட்டுமல்லாமல், மக்களின் வாழ்க்கையைப் பாதுகாத்து ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான முக்கிய பங்களிப்பாகவும் அமைந்துள்ளதாக WHO குறிப்பிட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே