பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றம் - இணையனுசரணை நாடுகள் அதிருப்தி
பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் கொண்டிருக்கும் கடப்பாடு நிறைவேற்றப்படவேண்டும் என பிரித்தானியா தலைமையிலான இணை அணுசரனை நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
ஜெனிவாவில் திங்கட்கிழமை (7) ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63 ஆவது கூட்டத்தொடரில் நேற்றைய அமர்வின்போது 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல்' தொடர்பில் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பான அறிக்கை வாசிக்கப்பட்டது.
இதன்போது இணையனுசரணை நாடுகளின் சார்பில் உரையாற்றிய பிரிட்டன் பிரதிநிதி, இலங்கையின் நிலைவரம் தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் நியாயமான மதிப்பீட்டை வரவேற்பதாகத் தெரிவித்தார்.
அதேபோன்று உள்நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் மற்றும் உலகளாவிய நெருக்கடி உள்ளிட்ட சவால்களுக்கு மத்தியிலும் சில விடயங்களில் இலங்கை அடைந்திருக்கும் நேர்மறையான முன்னேற்றத்தையும் அவர் பாராட்டினார்.
இருப்பினும் முக்கிய வழக்கு விசாரணைகளில் குறிப்பிட்டுக்கூறத்தக்க முன்னேற்றங்கள் எவையும் எட்டப்படவில்லை எனச் சுட்டிக்காட்டிய அவர், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் கொண்டிருக்கும் கடப்பாடு நிறைவேற்றப்படவேண்டும் என்று வலியுறுத்தினார்.
அதேவேளை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்கள் உள்ளிட்ட தரப்பினருக்கு எதிரான கண்காணிப்புக்கள் தொடர்வதாகக் கரிசனை வெளிப்படுத்திய அவர், படையினர் வசமுள்ள காணிகள் இன்னமும் முழுமையாக விடுவிக்கப்படாமை உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணப்படவேண்டும் என்றார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே