மட்டக்களப்பு இளைஞர்களின் குரல் கொள்கை உருவாக்கத்துடன் இணைக்கப்படும்
மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்களுடன் நடைபெற்ற “Voice to Policy Dialogue” கலந்துரையாடலில் வேலைவாய்ப்பு, கல்வி, மொழித்திறன், தொழில்முனைவு, போக்குவரத்து, இளைஞர் நலன் மற்றும் எதிர்கால வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
திறந்த பாராளுமன்ற முன்முயற்சிக்கான பாராளுமன்றக் குழுமத்தின் இணைத் தலைவராக சாணக்கியன் இராசபுத்திரன் இராசமாணிக்கம் இந்த முயற்சியை முன்னெடுத்து வருகிறார்.
இளைஞர்களின் கருத்துக்கள் வெறுமனே கலந்துரையாடல்களுடன் முடிவடையாமல், அவை பாராளுமன்றத்தின் கொள்கை உருவாக்கும் செயற்பாடுகளுடன் நேரடியாக இணைக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். மட்டக்களப்பில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் சுமார் 31 இளைஞர்களும் 12 பாராளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர்.
கல்வியிலிருந்து வேலைவாய்ப்பிற்குச் செல்வதில் காணப்படும் இடைவெளி, நடைமுறைத் திறன்கள், ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழித்திறன், தொழில்முனைவோருக்கான நிதி மற்றும் வழிகாட்டல், கிராமப்புற போக்குவரத்து சிரமங்கள், போதைப்பொருள் பாவனை மற்றும் மனநலம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து இளைஞர்கள் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
இந்த முயற்சியின் அடுத்த கட்டமாக, கலந்துரையாடல்களில் உருவாகும் இளைஞர் தலைவர்களை பாராளுமன்றத்தின் தொடர்புடைய குழுக்களுடன் இணைத்து, அவர்களின் கருத்துக்களை கொள்கை மற்றும் சட்ட உருவாக்க செயல்முறைகளுக்கு கொண்டு செல்வதே நோக்கம் என தெரிவிக்கப்பட்டது.
கம்பஹாவில் நடைபெற்ற முதலாவது நிகழ்வைத் தொடர்ந்து, மட்டக்களப்பில் நடைபெற்றது இந்தத் தொடரின் இரண்டாவது நிகழ்வாகும். அடுத்த நிகழ்வு கண்டியில் நடைபெறவுள்ளது.
“பாராளுமன்றம் மக்களிடமிருந்து தொலைவில் இருக்க முடியாது. மக்களின் குரலைக் கேட்டு, அந்தக் குரல் பாராளுமன்றத்தில் எடுக்கப்படும் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பாதையை உருவாக்க வேண்டும்” என சாணக்கியன் இராசபுத்திரன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே