AI போலி வீடியோக்கள், ஆபாசப் படங்களைப் பகிரும் Facebook குழுக்களுக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை
கொழும்பு: செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் போலி வீடியோக்கள் உள்ளிட்ட பெண்கள் மற்றும் சிறுவர்களின் ஆபாசப் படங்களைப் பகிரும் Facebook குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இலங்கை பொலிஸார் விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
இத்தகைய படங்கள் மற்றும் வீடியோக்கள் தொடர்பில் பொதுமக்கள் முறைப்பாடுகளைத் தெரிவிப்பதற்காக, கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு dir.cid@police.gov.lk என்ற விசேட மின்னஞ்சல் முகவரியை அறிமுகப்படுத்தியுள்ளது.
துன்புறுத்தல் அல்லது அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையிலான சட்டவிரோத உள்ளடக்கங்கள் தொடர்பான தகவல்களை இந்த மின்னஞ்சல் முகவரிக்கு நேரடியாக அனுப்ப முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோத Facebook குழுக்களை அடையாளம் கண்டு அவற்றை முடக்குவதுடன், அவற்றை நடத்தும் நபர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, பெண்கள் மற்றும் சிறுவர்களின் ஆபாசப் படங்களைப் பகிர்ந்ததாகக் கூறப்படும் Facebook குழுக்களை நடத்தி வந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவர் பெலியத்த பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கான துஷ்பிரயோகத் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட இந்தக் கைது நடவடிக்கையின்போது, சந்தேகநபரின் கைபேசியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும், இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைத்தால், 011 2381058 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவைத் தொடர்புகொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே