யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்: ஆதரவு கோரும் அலுவலகம்!
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை (25.08.2026) யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெறவுள்ள நிகழ்வுக்கு அனைவரும் ஆதரவு வழங்குமாறு காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் கோரிக்கை விடுத்துள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கான உதவிகளைத் துரிதப்படுத்துவதுடன், காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளையும் தீவிரமாக முன்னெடுத்து வருவதாக அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக விளக்கமளிக்கும் விசேட ஊடக சந்திப்பு நேற்று (23.08.2026) யாழ்ப்பாண ஆளுநர் அலுவலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் தலைவர் மகேஷ் கட்டுலந்த மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்களான தம்பையா யோகராஜா, மிராக் ரஹீம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அலுவலகத்துக்கு கிடைத்த 23,352 விண்ணப்பங்களில் 16,966 விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 9,819 முறைப்பாடுகளுக்கான பூர்வாங்க விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், மேலதிக விசாரணைகளுக்காக சுமார் 2,000 விண்ணப்பங்கள் தேடுதல் பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், அவற்றில் சுமார் 800 விண்ணப்பங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து தகவல்கள் கோரப்பட்டுள்ளன. இதுவரை 31 பேரை நேரடியாகக் கண்டுபிடித்துள்ளதாகவும் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இடைக்கால நிவாரணமாக இதுவரை 7,726 முறைப்பாடுகள் இழப்பீட்டு அலுவலகத்துக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதுடன், 5,540 விண்ணப்பதாரிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
வழங்கப்படும் ரூ.2 இலட்சம் தொகை இழப்பீடு அல்ல என்றும், காணாமல் போனவர்களைச் சார்ந்து வாழும் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவி என்றும் அலுவலகம் விளக்கமளித்துள்ளது.
காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகள் மற்றும் ஏனைய செலவுகளுக்காக இந்த வருடம் ரூ.375 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், விசேட அனுமதியின் அடிப்படையில் 69 புதிய உத்தியோகத்தர்களை நியமிக்க அனுமதி கிடைத்துள்ள நிலையில், இதுவரை 47 பேர் சேவையில் இணைந்துள்ளதாகவும், ஏனைய நியமனங்கள் அடுத்தடுத்த வாரங்களில் இடம்பெறும் எனவும் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே