“செம்மணியில் எங்கள் கண்மணிகள்” – வடமாகாணம் முழுவதும் பயணிக்கும் தெருவெளி நாடகம்
செம்மணியில் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் உறவுகளுக்கான உண்மை மற்றும் நீதிக்கான கோரிக்கையை உலகிற்கு எடுத்துச் செல்லவும், செம்மணி சம்பவங்களின் வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துரைக்கவும், “செம்மணியில் எங்கள் கண்மணிகள்” என்ற தெருவெளி நாடகம் வடமாகாணம் முழுவதும் அரங்கேற்றப்பட்டு வருகிறது.
கலைப்புலவர் ஜெயம் ஜெகனின் எழுத்து, பாடல் வரிகள் மற்றும் நெறியாள்கையில் உருவான சுமார் 30 நிமிட நாடகம், அரங்குகளுக்குள் மட்டுப்படுத்தப்படாமல் பொதுமக்கள் மற்றும் மாணவர்களை நேரடியாகச் சென்றடையும் வகையில் நடத்தப்படுகிறது.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் நடைபெறும் இந்த நாடகத்தில், செம்மணி சம்பவங்களை மையமாகக் கொண்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள், மனித உரிமை மீறல்கள், உறவுகளைத் தேடிய குடும்பங்களின் வேதனை உள்ளிட்ட விடயங்கள் உணர்வுபூர்வமாக காட்சிப்படுத்தப்படுகின்றன.
செம்மணி என்பது வெறுமனே ஒரு புதைகுழிப் பகுதி அல்ல; அங்கு புதைக்கப்பட்டவர்களின் கதைகளையும் நினைவுகளையும் தாங்கி நிற்கும் இடம் என்ற செய்தியையும் நாடகம் வலியுறுத்துகிறது.
உண்மை வெளிப்படுத்தப்பட்டு நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், சர்வதேச சமூகம் மற்றும் மனித உரிமை அமைப்புகளின் கவனத்தையும் நாடகம் கோருகிறது. இதுவரை 40க்கும் மேற்பட்ட இடங்களில் நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஜெயம் நாடகக் கல்லூரியின் ஒழுங்கமைப்பில் நடைபெறும் இந்நாடகத்தில் 15 கலைஞர்கள் பங்கேற்கின்றனர். செல்லக்குட்டி இசையமைத்துள்ளதுடன், தபேலா இசையில் ந. நவதர்சன் பங்களித்துள்ளார்.
11ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்தத் தெருவெளி நாடகப் பயணம், 17ஆம் திகதி செம்மணியில் நடைபெறும் நிகழ்விலும் அரங்கேற்றப்படவுள்ளதுடன், 20ஆம் திகதி வரை தொடரவுள்ளது.
பல்வேறு சவால்களுக்கு மத்தியில் ஆண், பெண் கலைஞர்கள் இணைந்து முன்னெடுக்கும் “செம்மணியில் எங்கள் கண்மணிகள்”, உண்மை, நினைவு மற்றும் நீதிக்கான கோரிக்கையை கலை வடிவில் அடுத்த தலைமுறைக்கும் உலக சமூகத்திற்கும் எடுத்துச் செல்லும் முயற்சியாக தொடர்கிறது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே