கண்டியில் 4 வயது சிறுமியை நடுவழியில் விட்டுச் சென்ற பெண் – காவல்துறை தீவிர தேடுதல்!
கண்டி – வத்தேகம நகரில் நான்கு வயது சிறுமியை முச்சக்கர வண்டியில் அழைத்துச் சென்ற பெண் ஒருவர், சிறுமியை நடுவழியில் இறக்கிவிட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று காலை சுமார் 7.00 மணியளவில் முச்சக்கர வண்டியில் வத்தேகம நகருக்கு வந்த பெண் ஒருவர், தன்னுடன் அழைத்து வந்த நான்கு வயது சிறுமியை அங்கேயே இறக்கிவிட்டு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறுமி தனியாக நிற்பதை அவதானித்த அப்பகுதி மக்கள், உடனடியாக வத்தேகம காவல்துறையினருக்கு தகவல் வழங்கியதுடன், சிறுமியை பாதுகாப்பாக காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதனையடுத்து சிறுமி கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மீட்கப்பட்ட சிறுமி தமிழ் மொழியில் பேசுகின்ற போதிலும், தனது பெற்றோர் அல்லது தான் வசிக்கும் இடம் தொடர்பான தகவல்களை தெளிவாக தெரிவிக்க முடியாத நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.
சிறுமியை அழைத்து வந்ததாக கூறப்படும் முச்சக்கர வண்டியின் பதிவு இலக்கமும் தெளிவாக கிடைக்காத நிலையில், வத்தேகம மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கமராக்களின் காட்சிகளை ஆய்வு செய்து, குறித்த முச்சக்கர வண்டியையும் சிறுமியை விட்டுச் சென்ற பெண்ணையும் அடையாளம் காணும் நடவடிக்கையில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே