ஜனாதிபதியின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை – சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றச்சாட்டு!

#SriLanka #Lanka4 #President #ADDA #ADDAADS #ADDAPOOJA
Abi
2 hours ago
ஜனாதிபதியின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை – சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றச்சாட்டு!

காணி விடுவிப்பு மற்றும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மாகாண சபைத் தேர்தலை ஒரு வருடத்திற்குள் நடத்துவதாக அரசாங்கமும் ஜனாதிபதியும் உறுதியளித்திருந்த போதிலும், இரண்டு ஆண்டுகள் கடந்தும் தேர்தல் நடத்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

அடுத்த ஆண்டிலாவது தேர்தல் நடைபெறுமா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளதாக அவர் தெரிவித்தார். அதேபோன்று, மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பிலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை என அவர் குற்றஞ்சாட்டினார்.

தமிழ்க் கட்சிகள் ஜனாதிபதியைச் சந்தித்தபோது, வடக்கு மற்றும் கிழக்கில் முப்படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பாக முக்கியமாக வலியுறுத்தியதாகவும், மலையக மக்களுக்கான காணி வழங்கல் தொடர்பிலும் கலந்துரையாடியதாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் பலாலி, மயிலிட்டி, தையிட்டி உள்ளிட்ட பகுதிகளிலும், முல்லைத்தீவில் கேப்பாப்பிலவிலும் மக்கள் தமது காணிகளை விடுவிக்கக் கோரி தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், மன்னார், கிளிநொச்சி மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் மக்கள் தங்களது வாழ்வாதார நிலங்களை மீட்பதற்காக போராடி வருவதாகவும், இந்த விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதியிடம் விரிவாக எடுத்துரைத்ததாகவும் தெரிவித்தார். 

இதற்கு பதிலளித்த அரசாங்கத் தரப்பு, முப்படைகளின் கட்டுப்பாட்டிலுள்ள எந்தெந்த காணிகளை விடுவிக்க முடியும் என்பது தொடர்பான அறிக்கையை கோரியுள்ளதாகவும், அந்த அறிக்கை கிடைத்த பின்னர் காணி விடுவிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவித்ததாகவும் அவர் கூறினார். 

எனினும், மக்களின் காணிகளை விடுவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மாற்றமில்லை என அரசாங்கம் தொடர்ந்து கூறிவந்தாலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக அதே பதிலே வழங்கப்படுவதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் விமர்சித்தார்.

யாழ்ப்பாணத்தில் குறிப்பிடத்தக்க அளவில் காணிகள் விடுவிக்கப்படவில்லை என்றும், சில வீதிகள் மாத்திரமே விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

“போராட்டக் களத்தில் நின்றவர்கள்” எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், தற்போது மக்களின் போராட்டங்களையும் கோரிக்கைகளையும் கண்டுகொள்ளாமல் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் விமர்சித்தார்.

அரசாங்கம் தம்மை இனவாதமற்ற, மதவாதமற்ற தரப்பாகக் கூறிக்கொண்டாலும், அதன் செயற்பாடுகளில் அது பிரதிபலிக்கவில்லை என சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4