தேசிய பாடசாலைகள், தேசிய வைத்தியசாலைகள் என்ற போர்வையில் மாகாணங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிக்கிறதா?

#SriLanka #M. A. Sumanthiran #government #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
7 hours ago
தேசிய பாடசாலைகள், தேசிய வைத்தியசாலைகள் என்ற போர்வையில் மாகாணங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிக்கிறதா?

மாகாணங்களுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களையும் மத்திய அரசு மீளப் பெறுவதற்கு ஏதுவாக நாம் நடந்து கொள்ளக்கூடாது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “அதிஉச்ச அதிகாரப் பகிர்வுடன் கூடிய முறைமை மாற்றமே எமது அடிப்படைத் தீர்வாகும். கல்வி மற்றும் சுகாதாரத் துறைகள் தற்போது மாகாணங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. 

 தேசிய பாடசாலைகள் மற்றும் தேசிய வைத்தியசாலைகள் என்ற போர்வையில், மாகாணங்களுக்கு உரித்தான அதிகாரங்களை மத்திய அரசு மீளப் பெறுவதை நாம் முழுமையாக எதிர்க்க வேண்டும். இவ்வாறான நிறுவனங்கள் தேசிய மயமாக்கப்படுவதால் எமக்கு நன்மைகள் கிடைக்கும் என்ற தவறான புரிதல் சிலரிடம் உள்ளது. 

 அவ்வாறான எண்ணப்பாடுகளைக் கைவிட்டு, போராட்டங்கள் ஊடாகப் பெற்றுக்கொண்ட அதிகாரங்களை நாங்களாகவே மத்திய அரசுக்குத் தாரைவார்க்கக் கூடாது. 

 நாட்டின் சனத்தொகையில் 25 சதவீதத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆறு கட்சிகள் ஒன்றிணைந்து, மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துதல், அதியுச்ச அதிகாரப் பகிர்வுடன் கூடிய புதிய அரசமைப்பை உருவாக்குதல் மற்றும் காணிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். 

 இது தொடர்பாக இந்தியா உள்ளிட்ட நாட்டு இராஜதந்திரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளோம். தொல்லியல் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனும், நானும் கலந்துரையாடியுள்ளோம். 

தொல்லியல் திணைக்களத்தைப் பயன்படுத்தி, வடக்கு – கிழக்கில் தமிழ் மக்களின் நிலங்களை அபகரிக்கும் முயற்சியைக் கைவிடுமாறு அவரிடம் வலியுறுத்தியுள்ளோம். 

 மந்திரிமனை மீள் உருவாக்கம் மற்றும் குருந்தூர் மலை, வெடுக்குநாறி மலை விவகாரங்களில் எமது மக்களின் வழிபாட்டு உரிமைகளை உறுதிப்படுத்துவது தொடர்பாகவும் அவருடன் பேச்சுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4