இலங்கையில் சாமானிய மக்களை விட அதிக காலம் உயிர்வாழும் அரசியல்வாதிகள் - ஆய்வில் தகவல்!

#SriLanka #people #Politician #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
5 hours ago
இலங்கையில் சாமானிய மக்களை விட அதிக காலம் உயிர்வாழும் அரசியல்வாதிகள் - ஆய்வில் தகவல்!

இலங்கையில் அரசியலில் ஈடுபட்டுள்ள அரசியல்வாதிகள், 65 வயதைக் கடந்தும் நீண்ட ஆயுளுடன் வாழும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும், அதேவேளை ஆசிய நாடுகளில் வைத்தியர்களின் சராசரி ஆயுட்காலம் ஏனைய தொழில்முறை நிபுணர்களைவிட குறைவாக இருப்பதாகவும் ஆய்வொன்றில் தெரியவந்துள்ளதாக சாமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

 மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவ தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் நிபுணர் வைத்தியர் சாமல் சஞ்சீவ, இந்த ஆய்வின் முடிவுகளை மேற்கோள்காட்டி இதனைத் தெரிவித்துள்ளார்.

 அவரின் கூற்றுப்படி, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட பெரும்பாலான ஆய்வுகள், அரசியல்வாதிகளின் ஆயுட்காலம் மற்ற தொழில்முறையினரைவிட குறைவாக இருப்பதாகக் கூறினாலும், இலங்கையில் நிலைமை அதற்கு மாறுபட்டதாக உள்ளது.

 கடந்த ஐந்து ஆண்டுகளில் பாராளுமன்றம் மற்றும் மாகாண சபைகளில் பணியாற்றியவர்களின் ஆயுட்காலம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட சமூக ஆய்வில், முக்கிய அரசியல்வாதிகளில் 65 சதவீதத்திற்கும் அதிகமானோர் 65 வயதைக் கடந்தும் வாழ்ந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அதேபோன்று, 10 சதவீதத்திற்கும் அதிகமானோர் 75 வயதைக் கடந்தும், சுமார் ஐந்து அரசியல்வாதிகள் 80 வயது அல்லது அதற்கு மேலும் வாழ்ந்துள்ளனர் என்றும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 இளம் வயதில் உயிரிழந்த அரசியல்வாதிகளில் பெரும்பாலானோர் திடீர் மாரடைப்பு, விபத்துகள் அல்லது மது மற்றும் போதைப்பொருள் தொடர்பான காரணங்களால் உயிரிழந்ததாகவும், புற்றுநோய் போன்ற நோய்களால் ஏற்படும் மரணங்கள் ஒப்பீட்டளவில் குறைவாக இருந்ததாகவும் சாமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

 அரசியல்வாதிகளின் நீண்ட ஆயுளுக்கான காரணங்களாக உயர்தர மருத்துவ சேவைகளுக்கான எளிய அணுகல், விரிவான காப்புறுதி வசதிகள், பாராளுமன்ற சலுகைகள் மூலம் சிறந்த வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் வாய்ப்பு, குடும்ப ஆதரவு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஆகியவற்றை அவர் சுட்டிக்காட்டினார்.

 மேலும், பொதுமக்களுடன் ஒப்பிடுகையில் அரசியல்வாதிகள் நிதி அழுத்தங்களை குறைவாக எதிர்கொள்வதாகவும், கடன் சுமை, வரி, பிள்ளைகளின் கல்விச் செலவுகள் மற்றும் மருத்துவச் செலவுகள் போன்ற சுமைகள் குறைவாக இருப்பதால் மனஅழுத்தமும் குறைவாக இருந்து, அது நீண்ட ஆயுளுக்கு காரணமாக இருக்கக்கூடும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

 1977ஆம் ஆண்டுக்குப் பின்னர் அமைச்சர்களாகவும் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் தெரிவு செய்யப்பட்ட பலர், விபத்துகள் அல்லது பயங்கரவாதத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களைத் தவிர, 70 மற்றும் 80 வயதுகளைக் கடந்தும் வாழ்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 இந்த ஆய்வு தொடர்பான மேலதிக பகுப்பாய்வுகள் தற்போது தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், விரிவான சர்வதேச அறிக்கை அடுத்த ஆறு மாதங்களுக்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் சாமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

 தற்போது இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ (80), முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (77) மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (74) ஆகியோர் தங்களது அரசியல் கட்சிகளின் தலைவர்களாக அல்லது முக்கிய அரசியல் செல்வாக்குடன் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4