தொண்டமானாறு - அச்சுவேலி வீதிப் புனரமைப்பு: வீதியோரக் கழிவுகளால் பணியாளர்கள் கடும் அவதி!
யாழ்ப்பாணத்தில் தற்போது நிலவும் கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில், வீதியோரங்களில் கொட்டப்படும் குப்பைகள் மிக வேகமாக அழுகித் துர்நாற்றத்தை ஏற்படுத்துகின்றன.
இதனால் நாள் முழுவதும் வீதியில் நின்று வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு வாந்தி, மயக்கம் மற்றும் கடுமையான தொற்றுநோய்கள் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
சாதாரண வீட்டுக் குப்பைகளையும் தாண்டி, பயன்படுத்தப்பட்ட சிறுவர் மலக் கழிவுகள் (Diapers), மனிதக் கழிவுகள் மற்றும் அழுகிய நிலையில் உள்ள இறந்த மிருகங்களின் உடலங்கள் போன்ற சினேகப்பூர்வமற்ற, ஆபத்தான கழிவுகளே இப்பகுதியில் வீசப்படுவதாகப் பணியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
தமது கிராமத்துக்கான ஒரு முக்கிய வீதி அபிவிருத்திப் பணி மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டு வரும் வேளையில், அதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டிய பொதுமக்களே இவ்வாறான பொறுப்பற்ற செயல்களில் ஈடுபடுவது மிகவும் வேதனைக்குரிய விடயம் என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வீதியோரங்களில் இவ்வாறான அநாகரிகமான முறையில் கழிவுகளைக் கொட்டும் நபர்களைக் கண்காணித்து, அவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனப் பணியாளர்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.
சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களும் (பிரதேச சபை), சுகாதாரப் பிரிவினரும் (PHI) உடனடியாக இப்பகுதியில் விசேட கண்காணிப்பு மற்றும் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே