மருதங்கேணி காணி சுவீகரிப்பு நிறுத்தம் - அதிகாரிகளுக்கு அனுமதி மறுப்பு!

#SriLanka #Lanka4 #land #Permission #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
4 hours ago
மருதங்கேணி காணி சுவீகரிப்பு நிறுத்தம் - அதிகாரிகளுக்கு அனுமதி மறுப்பு!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பகுதியில் இராணுவத் தேவைக்காகத் தனியார் காணி ஒன்றை உத்தியோகபூர்வமாகச் சுவீகரிக்கும் முயற்சி இன்று (ஜூலை 9) பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகளின் கடுமையான எதிர்ப்பால் தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளது. 

எனினும், அதன் பின்னர் காணியைப் பார்வையிடச் சென்ற காணி உரிமையாளரையும் பிரதேச செயலக அதிகாரிகளையும் இராணுவத்தினர் அங்கிருந்து திருப்பி அனுப்பிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் மற்றும் அரசியல்வாதிகளின் கூட்டு எதிர்ப்பு மருதங்கேணியில் அமைந்துள்ள 10 ஆவது விஜயபாகு காலாட்படைப் பிரிவின் முகாமிற்கு அருகிலுள்ள தனியார் காணியை நில அளவை செய்து, இராணுவத் தேவைக்காகச் சுவீகரிப்பதற்கு இன்று காலை ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 

இதற்காகப் பிரதேச செயலக காணி அதிகாரிகளும் நில அளவைத் திணைக்களத்தினரும் வருகை தந்திருந்தனர். இதையறிந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், உள்ளூராட்சி சபை பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் கிராம மக்கள் அக்காணியில் திரண்டு உக்கிரமான எதிர்ப்பை வெளியிட்டனர். 

அத்துடன், அக்காணியை இராணுவத்திற்கு வழங்க வேண்டாம் என அதன் உரிமையாளரிடமும் அவர்கள் நீண்டநேரம் கோரிக்கை விடுத்தனர். சுமார் 30 ஏக்கருக்கும் அதிக பரப்பளவைக் கொண்ட அக்காணியில், 20 ஏக்கரை மட்டும் தனியாக அடையாளப்படுத்திச் சுவீகரிக்கும் திட்டத்திற்கு ஆரம்பத்தில் உரிமையாளர் இணங்கியிருந்தாலும், மக்களின் தொடர் எதிர்ப்புக் காரணமாகத் தனது முடிவை மாற்றிக்கொண்டார். 

இறுதியில், "எனது காணியை அளக்க அனுமதிக்க முடியாது" என நில அளவைத் திணைக்களத்திற்கு அவர் எழுத்து மூலம் கடிதம் வழங்கியதை அடுத்து இன்றைய அளவீட்டுப் பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டன.

அதிகாரிகளையும் உரிமையாளரையும் விரட்டிய இராணுவம் நில அளவைப் பணிகள் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, காணி உரிமையாளரும் பிரதேச செயலக காணி உத்தியோகத்தர்களும் உண்மை நிலவரத்தைக் கண்டறிய 10 ஆவது விஜயபாகு படைப்பிரிவு வளாகத்தில் உள்ள அக்காணியைப் பார்வையிடச் சென்றுள்ளனர்.

இதன்போது, குறித்த காணி ஏற்கனவே இராணுவத் தேவைக்காக அளவிடப்பட்டுத் தங்களின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், இராணுவப் பகுதிக்குள் சட்டப்பூர்வ அதிகாரிகள் மற்றும் காணி உரிமையாளர் உட்பட யாரும் நுழைய முடியாது என்றும் கூறி இராணுவத்தினர் அவர்களை அச்சுறுத்தி அங்கிருந்து திருப்பி அனுப்பியுள்ளனர்.

குறித்த காணியின் உரிமையாளர் வெளிநாட்டில் வசித்து வந்த சமயம், கடந்த 2013 ஆம் ஆண்டு அவரது எவ்வித அனுமதியுமின்றி இராணுவத் தேவைக்காக முதன்முறையாக இக்காணி அளவீடு செய்யப்பட்டிருந்தது. 

அந்தச் சட்டவிரோத அளவீட்டை 13 வருடங்களின் பின்னர் இன்று உத்தியோகபூர்வமாக இறுதிப்படுத்த முயன்றபோதே, மக்களின் தலையீட்டால் அது முறியடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4