தீர்வு இல்லையேல் கைதிகளின் உறவினர்களுடன் வீதிக்கு இறங்குவோம் : சிறைக்கைதிகள் பாதுகாப்பு சங்கம் எச்சரிக்கை
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் சம்பவத்துக்கு உடனடி தீர்வு கிடைக்காவிடின், கைதிகள் மற்றும் சிறை அதிகாரிகளின் உறவினர்களைத் திரட்டி வீதியில் இறங்கிப் போராடத் தயாராக இருப்பதாக சிறைக்கைதிகள் உரிமைகள் பாதுகாப்பு சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அச்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர சுதேஷ் நந்திமால், நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற அண்மைய மோதல் சம்பவமானது தற்செயலாக நடந்தது ஒன்றல்ல. சிறைச்சாலைகளில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகளைக் கட்டுப்படுத்துவதற்கு தேவையான எண்ணிக்கையில் 1/4 பங்கு உத்தியோகஸ்தர்கள் மட்டுமே தற்போது பணியில் உள்ளனர்.
650 பேர் மட்டுமே இருக்க வேண்டிய இடத்தில் 2000 இற்கும் அதிகமானோர் அடைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 250 முதல் 300 கைதிகளுக்கு ஒரு கழிப்பறை மட்டுமே பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளதால், கைதிகள் மற்றும் அதிகாரிகள் ஆகிய இருதரப்பும் பாரிய மன அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்தத் தீவிர அழுத்தமே நீர்கொழும்பு சிறைச்சாலையில் மோதல் ஏற்படுவதற்கு பிரதான காரணமாகும். இந்த நிலைமையில் சிறை அதிகாரிகளோ அல்லது கைதிகளோ தன்னிச்சையாக மோதிக்கொள்ளவில்லை. அரசாங்கம் ஏற்படுத்திய நெருக்கடியே இவர்களை மோதவிட்டுள்ளது.
இந்த மோதல்களில் கைதிகள் மட்டுமன்றி சிறை உத்தியோகஸ்தர்கள் சிலரும் உயிரிழந்துள்ளனர். சிறைக்குள் நிலவும் அதிக நெரிசலால் பரவி வரும் டெங்கு காய்ச்சல் காரணமாக ஏற்கனவே 5 பெண் கைதிகள் உயிரிழந்துள்ளனர்.
முறையான மருத்துவ வசதிகள் மற்றும் மருந்துகள் இல்லாத காரணத்தினாலேயே பெண் கைதிகள் சிறைக்குள் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். பெண் கைதியொருவர் மருத்துவப் பரிசோதனைக் கருவியைக் கழுத்தில் மாட்டிக்கொண்டு குறியீட்டு ரீதியாகப் போராடியதன் மூலம் சிறைச்சாலைகளின் சுகாதாரப் பேரழிவு அம்பலமாகியுள்ளது” என்றார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே