ஆழ்கடலில் அதிசய உலகம்: வெறும் இரு வாரங்களில் 31 புதிய உயிரினங்கள் கண்டுபிடிப்பு!
பிரேசிலின் கடற்கரைக்கு அப்பால் உள்ள சர்வதேச ஆழ்கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அதிநவீன கடல்சார் ஆய்வில், வெறும் இரண்டு வார காலப்பகுதிக்குள் 31 புதிய விசித்திர உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
“Falkor” எனப்படும் நவீன ஆய்வுக் கப்பலில் அமெரிக்கா, அவுஸ்திரேலியா, பிரேசில் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சர்வதேச விஞ்ஞானிகள் குழுவினர் இணைந்து இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆராய்ச்சியை முன்னெடுத்திருந்தனர்.
இவர்கள் கடலின் நடுக்கடல் பகுதியை (mid-ocean zone) மையமாகக் கொண்டு தங்களது ஆய்வுகளை மேற்கொண்டனர். இந்தத் தீவிர தேடுதலின் போது விசித்திரமான நண்டுகள், ஜெல்லிமீன்கள், சீப்பு ஜெல்லிகள் (comb jellies), புழு வகைகள் மற்றும் இதுவரை அறிந்திராத புதிய வகை ஓட்டுடலிகள் (crustaceans) உள்ளிட்ட பல்வேறு கடல்வாழ் உயிரினங்கள் முதன்முறையாகக் கண்டறியப்பட்டுள்ளன.
இவை பெருங்கடலின் உயிரியல் பல்வகைமையை (marine biodiversity) மேலும் தெளிவுபடுத்துவதாக அமைந்துள்ளன. இந்த வியக்கத்தக்க கண்டுபிடிப்புக்கு, “Squid” எனப்படும் அதிநவீன நுண்ணோக்கி தொழில்நுட்பம் (microscope technology) முக்கிய காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஆழ்கடலில் பிடிபடும் உயிரினங்களின் செல் அமைப்புகளைக் கரைக்குக் கொண்டு வராமலேயே, கப்பலிலேயே நேரடியாகப் பார்வையிட்டு ஆய்வு செய்ய விஞ்ஞானிகளுக்கு வழிவகுத்துள்ளது.
பெருங்கடலின் பெரும்பகுதி இன்னும் மனிதர்களால் முழுமையாக ஆராயப்படாமலேயே உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள ஆராய்ச்சியாளர்கள், இவ்வாறான தொடர் ஆய்வுகள் மனிதகுலத்தின் உயிரியல் அறிவை மேம்படுத்துவதுடன், உலகளாவிய காலநிலை மாற்றம் மற்றும் கடல் சூழல் குறித்த புரிதலையும் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் எனத் தெரிவித்துள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே