நிட்டம்புவவில் யானைத் தந்தம் மற்றும் தந்த ஆபரணங்களுடன் சந்தேகநபர் கைது!
நிட்டம்புவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில், யானைத் தந்தத்தின் ஒரு பகுதி, தந்தத்தால் செய்யப்பட்ட மோதிரம் மற்றும் யானை வடிவிலான தந்தப் பதக்கம் (Pendant) ஆகியவற்றுடன் நபர் ஒருவர் வனவிலங்கு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹொரகொல்ல தேசிய பூங்கா மற்றும் மேற்கு மாகாண வனவிலங்கு அலுவலக அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தச் சுற்றிவளைப்பு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கோபேய்கனே பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் குறித்த யானைத் தந்தப் பொருட்களை சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்யத் தயாராக இருந்த போதே அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார்.
அவர் இந்த யானைத் தந்தப் பொருட்களை எவ்வாறு பெற்றார் என்பது தொடர்பில் வனவிலங்கு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரும், அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பெருமதிப்புமிக்க யானைத் தந்தப் பொருட்களும் அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இதேவேளை, வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பில்; யானைத் தந்தம் உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட விலங்குகளின் உடற்பாகங்களை வைத்திருத்தல், எடுத்துச் செல்லுதல், காட்சிப்படுத்துதல் அல்லது விற்பனை செய்தல் என்பன 'விலங்குகள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்புச் சட்டத்தின்' கீழ் முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக நினைவூட்டியுள்ளது.
மேலும், யானைத் தந்த ஆபரணங்கள் உள்ளிட்ட விலங்கு உடற்பாகங்களின் சட்டவிரோத வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு எதிராகத் தொடர்ந்தும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே