கோட்டாபயவை கைது செய்ய தடைக்கோரும் மனு: நீதிமன்றில் சட்டத்தரணிகள் மோதல்!

#SriLanka #Gotabaya Rajapaksa #Arrest #Easter Sunday Attack #Lanka4 #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
3 hours ago
கோட்டாபயவை கைது செய்ய தடைக்கோரும் மனு: நீதிமன்றில் சட்டத்தரணிகள் மோதல்!

வரலாற்றை நினைவூட்டிய ஜனாதிபதி சட்டத்தரணி; சட்டமா அதிபர் திணைக்களம் நிர்க்கதியாகியுள்ளதாக நீதிமன்றில் பரபரப்பு விவாதம்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தின் விசாரணைகள் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் (Writ) மனு மீதான பரிசீலனை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆரம்பமாகியுள்ளது. 

மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரொஹாந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் சரத் திஸாநாயக்க ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது நீதிமன்றத்தில் மனுதாரர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா பல முக்கிய விடயங்களை முன்வைத்தார்.

அரசியலமைப்பால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள தனிப்பட்ட சுதந்திரத்தை மிக வரையறுக்கப்பட்ட சந்தர்ப்பங்களில் மட்டுமே கட்டுப்படுத்த முடியும் என்றும், போதிய ஆதாரங்களோ நியாயமான அடிப்படையோ இன்றி ஒருவரைக் கைது செய்வதோ அல்லது விளக்கமறியலில் வைப்பதோ ஒருபோதும் தண்டனையாக அமையக்கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்திய உயர்நீதிமன்ற நீதியரசர் ஜனக் டி சில்வா தலைமையிலான ஆணைக்குழு, 214 நாட்கள் முழுமையாக ஆராய்ந்து, 257 பேரிடம் சாட்சியங்களைப் பெற்று வெளியிட்ட 6 தொகுதிகளைக் கொண்ட விரிவான அறிக்கையின் எந்தவொரு இடத்திலும் கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்றும் அவர் நீதிமன்றில் தெளிவுபடுத்தினார்.

தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி சட்டத்தரணி, விசாரணை அதிகாரிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து வரலாற்றை நினைவூட்டினார். முன்னைய 'ஜானகி டி அல்விஸ் ஆணைக்குழு' மூலம், அப்போதைய குற்றப்புலனாய்வுத் திணைக்கள (CID) பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் (DIG) ரவி செனவிரத்ன ஆகியோருக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர பரிந்துரைக்கப்பட்டிருந்ததை அவர் சுட்டிக்காட்டினார். 

அவ்வாறான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான ஒருவரே தற்போது இந்த விசாரணைகளை வழிநடத்தி, சட்டவிரோதமான முறையில் கைதுகளை மேற்கொள்ள முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார். இந்த விசாரணையின் போது சட்டமா அதிபர் திணைக்களத்திற்கும் பிரதிவாதி தரப்பிற்கும் இடையில் கடுமையான விவாதம் ஒன்று ஏற்பட்டது. 

"விசாரணைகளை வழிநடத்தும் தரப்பினர் பல்வேறு நபர்களைக் கைது செய்யுமாறு விடுக்கும் அழுத்தங்கள் காரணமாக, தற்போது சட்டமா அதிபர் திணைக்களமும் கூட நிர்க்கதியான (அசரணை) நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது" என ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா குறிப்பிட்டார்.

இதற்குப் பதிலளித்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத், "கற்றுத்தேர்ந்த ஜனாதிபதி சட்டத்தரணி, சட்டமா அதிபர் திணைக்களத்தை ஒரு 'கைப்பாவை' போலக் காட்ட முயற்சிக்கிறார்; இது வெறுமனே ஊடகங்களை இலக்கு வைத்துச் செய்யப்படும் ஒரு பிரகடனமாகும்" என கடுமையாக ஆட்சேபனை தெரிவித்தார்.

எனினும், தான் சட்டமா அதிபர் மீது தனிப்பட்ட ரீதியில் குற்றம் சாட்டவில்லை என்றும், நிலவும் உண்மை நிலைமையை மட்டுமே சுட்டிக்காட்டியதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி அதற்கு விளக்கமளித்தார்.

நீதிமன்றில் ஏற்பட்ட இந்த பரபரப்பான விவாதங்களைத் தொடர்ந்து, இந்த ரிட் மனு மீதான மேலதிக பரிசீலனைகளை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4