இலங்கை எக்ஸ்போ-2027 சர்வதேச கண்காட்சி: வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு விசேட தெளிவுபடுத்தல்!

#SriLanka #International #Lanka4 #Foriegn #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 hours ago
இலங்கை எக்ஸ்போ-2027 சர்வதேச கண்காட்சி: வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு விசேட தெளிவுபடுத்தல்!

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, 2026 ஜூன் 12 அன்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு வளாகத்தில் இலங்கை எக்ஸ்போ 2027 குறித்த இராஜதந்திர விளக்கக் கூட்டத்தை நடத்தியது. 

இக்கூட்டத்தில், தூதரகப் பணியகங்களின் தலைவர்கள், கொழும்பைத் தளமாகக் கொண்ட இராஜதந்திர அணியின் பிரதிநிதிகள், புதுடில்லி மற்றும் பிற வெளிநாட்டுத் தலைநகரங்களைத் தளமாகக்கொண்ட மற்றும் இலங்கைக்கான அங்கீகாரம் பெற்ற தூதரகத் தலைவர்கள்/அவர்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். 

வெளிநாடுகளில் உள்ள இராஜதந்திர அதிகாரிகள் மெய்நிகர் நிலையில் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சிக்கு வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் கைத்தொழில் மற்றும் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி ஆகியோர் இணைத் தலைமை தாங்கினர். 

கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்திக்கான பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்கவும் இக்கூட்டத்தில் பங்கேற்றார். வரவேற்புரையாற்றிய வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜ, 2027 ஜனவரி 14 முதல் 17 வரை கொழும்பில் உள்ள BMICH-இல் நடைபெறவுள்ள EXPO-2027, சமீப ஆண்டுகளில் இலங்கையில் நடைபெறும் மிகப்பெரிய சர்வதேச வர்த்தக நிகழ்வுகளில் ஒன்றாகும் எனக் குறிப்பிட்டார்.

கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் விஜித ஹேரத், சர்வதேச பொருளாதார ஈடுபாட்டை ஆழப்படுத்தவும், வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஊக்குவிக்கவும், உலக நாடுகளுடனான கூட்டாண்மைகளை வலுப்படுத்தவும் இலங்கை-EXPO 2027 ஒரு முக்கிய தளமாக விளங்குகிறது, என்பதை எடுத்துரைத்தார். 

வர்த்தக சமூகங்கள், வர்த்தக சபைகள், வர்த்தக சங்கங்கள் மற்றும் முதலீட்டாளர் குழுக்களின் பங்கேற்பை ஊக்குவிப்பதில் தூதரகங்கள் ஆற்றக்கூடிய முக்கிய பங்கையும் அமைச்சர் ஹேரத் வலியுறுத்தியதுடன், கொழும்பில் நடைபெறும் இலங்கை-EXPO 2027-இல் கலந்துகொள்ளுமாறு அரசாங்கங்கள், நிறுவகங்கள் மற்றும் தனியார் துறை பங்குதாரர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

இராஜதந்திர அணியினர் எழுப்பிய வினாவிற்கு பதிலளித்த கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி அரசாங்கத்தின் தேசிய கனிமக் கொள்கை குறித்த ஒரு மேலோட்டத்தை வழங்கியதோடு, கனிமத் துறை உட்பட பரந்த அளவிலான துறைகளை உள்ளடக்கும் வகையில் இலங்கையின் ஏற்றுமதி மற்றும் முதலீட்டு அபிவிருத்தி முயற்சிகள் விரிவுபடுத்தப்பட்டு வருவதாக தெளிவுபடுத்தினார்.

வர்த்தகத் தொடர்புகளை விரிவுபடுத்துவதற்கும், கூட்டாண்மைகளை உருவாக்குவதற்காக உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளுடன் இணைவதற்கும் எக்ஸ்போ 2027 இலங்கை உருவாக்கும் வாய்ப்புகளை பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க எடுத்துரைத்தார்.

ஏற்றுமதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் மங்கல விஜேசிங்க, பங்கேற்பாளர்களுக்கு எக்ஸ்போ-2027 குறித்ததொரு விரிவான விளக்கக்காட்சியை வழங்கினார்.

இவ்விளக்கக்க்கூட்டமானது, எக்ஸ்போ 2027 இல், இலங்கையில் தூதரகப் பிரதிநிதிகள் மற்றும் சர்வதேசப் பங்காளிகளின் பங்கேற்பை ஆதரிப்பதற்கும் ஊக்குவிப்பதற்குமான வழிகள் குறித்த கருத்துப் பரிமாற்றத்திற்கான ஒரு வாய்ப்பை வழங்கியது.

கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திலக ஜயசுந்தர மற்றும் ஏனைய சிரேஷ்ட அரச அதிகாரிகளும் இவ்விளக்கக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4