தென்னாபிரிக்காவில் கொடூர துப்பாக்கிச்சூடு: 12 பேர் பலி, 9 பேர் காயம்!
தென்னாபிரிக்காவின் ஜொஹன்னஸ்பேர்க் நகரின் புறநகர்ப் பகுதியொன்றில் இடம்பெற்ற கொடூரமான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளனர். கிளீவ்லேண்ட் (Cleveland) பகுதியில் அமைந்துள்ள அத்துமீறிய குடியேற்றவாசிகள் வாழும் பகுதியிலேயே இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் நடத்தப்பட்டுள்ளதுடன், இதில் மேலும் 9 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்றைய தினம் அந்நாட்டு நேரப்படி இரவு 11:10 மணியளவில் இச்சம்பவம் பதிவாகியுள்ளது.
வெள்ளை நிற சிற்றூர்தி ஒன்றில் வந்த 10 இற்கும் மேற்பட்ட சந்தேகநபர்கள், கிளீவ்லேண்ட் பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இறங்கியுள்ளதாக காவல்துறையினர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்தேகநபர்கள் அந்த அத்துமீறிய குடியேற்றப் பகுதியின் இரண்டு பிரதான நுழைவாயில்கள் ஊடாகவும் உள்ளே புகுந்து, பல இடங்களுக்கும் சென்று அங்கிருந்த மக்கள் மீது சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். பின்னர் அவர்கள் வந்த வாகனத்திலேயே அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். தாக்குதல் நடத்தப்பட்ட இடத்திலேயே 8 ஆண்களும் 3 பெண்களும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டதுடன், காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலும் ஒரு ஆண் உயிரிழந்துள்ளார்.
இதற்கமைய, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த மேலும் 9 பேர் சிகிச்சைக்காக வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், தாக்குதல் நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தப்பியோடிய சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக அந்நாட்டு காவல்துறையினரால் தற்போது பிரம்மாண்ட தேடுதல் வேட்டையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே