ஆண்டு இறுதிக்குள் 31,000 புதிய ஆசிரியர்கள் சேவையில் இணைப்பு!
பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில், இந்த ஆண்டு இறுதிக்குள் 31,000 க்கும் அதிகமான புதிய ஆசிரியர்களைச் சேவையில் இணைத்துக் கொள்ள கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. தற்போது நாடு முழுவதும் சுமார் 44,000 ஆசிரியர் வெற்றிடங்கள் நிலவி வரும் பின்னணியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கல்வியியல் (Bachelor of Education) பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக, முகாமைத்துவ சேவைகள் திணைக்களம் முறையான அனுமதியை வழங்கியுள்ளது. இந்த ஆட்சேர்ப்புப் பணிகள் அனைத்தும் அந்தந்த மாகாண சபை மட்டங்களில் இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்தப்படும் என கல்வி அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. ஆசிரியர் சேவைக்காக அண்மையில் நடத்தப்பட்ட வரையறுக்கப்பட்ட மற்றும் திறந்த போட்டிப் பரீட்சைகளின் முடிவுகள் வரும் செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்படவுள்ளன.
இந்த பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் ஒட்டுமொத்தமாக 23,006 பேர் தேர்வு செய்யப்படவுள்ளதுடன், அவர்களுக்கான நியமனக் கடிதங்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் வழங்கப்படும்.
இதன்படி வரையறுக்கப்பட்ட போட்டிப் பரீட்சைக்கு தோற்றியவர்களில் 15,000 பேருக்கும் திறந்த போட்டி பரீட்சைக்கு தோற்றியவர்களில் 8,006 பேருக்கும் இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.
போட்டிப் பரீட்சை மூலம் உள்வாங்கப்படுபவர்களுக்கு மேலதிகமாக, தேசிய கல்வியியற் கல்லூரிகளில் டிப்ளோமா கற்கைநெறியை பூர்த்தி செய்த சுமார் 6,500 பேர் எதிர் வரும் டிசம்பர் மாதத்தில் ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே