பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 10 பேர்ச் காணி; நாளாந்த சம்பளம் 400 ரூபாவினால் அதிகரிப்பு
தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் பெருந்தோட்ட நிறுவனங்களின் தற்போதைய சவால்கள் குறித்து ஆராய, தொழில் அமைச்சு மற்றும் பெருந்தோட்ட அமைச்சு ஆகியன இணைந்து விசேட கூட்டுப் பொறிமுறை ஒன்றை ஆரம்பித்துள்ளன.
2026ஆம் ஆண்டுக்கான தேசிய வரவுசெலவுத் திட்டத்தின் (Budget) கீழ் முன்மொழியப்பட்டவாறு, தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படைச் சம்பளம் 400 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, மொத்த நாளாந்தச் சம்பளம் 1,750 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த 400 ரூபா அதிகரிப்பில், 200 ரூபாவை பெருந்தோட்ட நிறுவனங்களும் (RPCs), எஞ்சிய 200 ரூபாவை அரசாங்கம் தனது நேரடி ஊக்குவிப்புக் கொடுப்பனவாகவும் வழங்க உடன்படிக்கை செய்யப்பட்டுள்ளது.
மலையக மக்களின் நீண்டகாலக் கோரிக்கையான வீட்டு நில உரிமைத் திட்டத்தின் கீழ், லயன் குடியிருப்பாளர்களுக்கு இதுவரை தலா 7 பேர்ச் காணி வழங்கவே திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும், தற்போதைய புதிய அரசாங்கம் அதனை 10 பேர்ச் காணி வரை அதிகரித்து, அதற்கான காணி உரிமங்களை (Deeds) வழங்கும் பணிகளை விரைவுபடுத்தியுள்ளது.
இலங்கையின் பெருந்தோட்ட நிலைமைகள் குறித்து சர்வதேச மனித உரிமை அமைப்புகள் வெளியிட்ட சில அறிக்கைகள் கள யதார்த்தத்திற்குப் புறம்பானவை மற்றும் துல்லியமற்றவை என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான உண்மையான நிலவரங்களை உள்ளடக்கிய விரிவான விளக்க அறிக்கை ஒன்றை எதிர்காலத்தில் சர்வதேச அரங்கில் சமர்ப்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே