உயிரித்த ஞாயிறு தாக்குதலில் ஜே.வி.பிக்கு தொடர்புள்ளதா? மஹிந்த அணி முன்வைக்கும் பல குற்றச்சாட்டுகள்!
உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புச் சம்பவத்தின்போது பயன்படுத்தப்பட்ட குண்டுகள் ஜே.வி.பி கட்சியின் தேசிய பட்டியல் வேட்பாளராக இருந்த இப்ராஹிமின் செப்புத் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பேச்சாளர், சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தடைப்படக்கூடாது என கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்த பின்னர் இப்ராஹிமின் செம்புத் தொழிற்சாலையில் சந்தேகத்தின் பேரில் 7 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால், இரண்டு வாரங்கள் முடிவடைவதற்குள் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அவர்களின் பிணைக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் விடுதலை செய்ய சம்மதித்தது.
இந்த பின்னணியில் சிஐடியில் உத்தரவிட்ட அதிகாரி யார் என்பதை அருட்தந்தை வெளிப்படுத்த வேண்டும்.
அத்துடன், மட்டக்களப்பு நீதிமன்றத்தில் பயங்கரவாதி சஹ்ரானுக்கு எதிராக வழக்கு நிலுவையில் இருந்தபோது, கொழும்பிலிருந்து தனது சொந்த வாகனத்தில் சஹ்ரானை மறைத்து, அனைத்து சோதனைச் சாவடிகளையும் தாண்டி நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்ற ஒரு சட்டத்தரணி உள்ளார். தற்போது ஜனாதிபதியின் ஆலோசகராகவும் இருக்கும் அந்த சட்டத்தரணியின் பெயரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு அருட்தந்தை சிறில் காமினி பகிரங்கப்படுத்த வேண்டும்.
பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் நுவரெலியாவில் வைத்து சாரா ஜாஸ்மினைக் கைது செய்யச் சென்றபோது, சிஐடி அதிகாரி ஒருவர் தொலைபேசியில் அழைத்து, "இது எங்களது விசாரணை, நீங்கள் தலையிடாமல் திரும்பிச் செல்லுங்கள்" எனக் கூறி தடுத்தார்.
அன்று சாரா ஜாஸ்மின் கைது செய்யப்பட்டிருந்தால் இந்தத் தாக்குதலே நடந்திருக்காது. அந்த சிஐடி அதிகாரி யார்? இதனிடையே, "நாளை காலை குண்டு வெடிக்கப் போகிறது" என சுரேஷ் சலே தனது மேசைக்கு அனுப்பிய உத்தியோகபூர்வ புலனாய்வு அறிக்கைகளை அலட்சியம் செய்து புறக்கணித்த ஒரு அதிகாரி, தற்போதைய அரசாங்கத்திலும் பதவியில் உள்ளார்.
இலங்கையின் பௌத்த தலைமைகளை அழிப்பதற்கும், எப்படியாவது ராஜபக்ஷக்களின் பெயரை இதில் தொடர்புபடுத்துவதற்கும் சுரேஷ் சலேயைப் பகடைக்காயாகப் பயன்படுத்த வேண்டாம் என்றும், உண்மைகளை மூடிமறைக்காமல் அருட்தந்தை சிறில் காமினி இதற்குப் பகிரங்கமாகப் பதிலளிக்க வேண்டும் என்று” குறிப்பிட்டுள்ளார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே