முல்லைத்தீவு பொலிஸ் நிலையம் அமைந்துள்ள தனியார் காணியை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தல்!
முல்லைத்தீவு பொலிஸ் நிலையம் அமைந்துள்ள தனியார் காணி உடனடியாக விடுவிக்கப்படவேண்டும் என வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
இதனையடுத்து குறித்த காணியை விடுவிப்பதற்கு பொலிசார் மூன்றுமாத கால அவகாசம் கோரியுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்போது கருத்து வெளியிட்ட ரவிகரன், முல்லைத்தீவு பொலிஸ்நிலையம் அமைந்துள்ள காணியை எப்போது விடுவிக்கப்போகின்றீர்கள். அந்தக்காணி மு.நாகம்மா என்பவருக்குரிய ஒரு தனியார் காணியாகும். குறித்த காணி விடுவிப்புத் தொடர்பாக மாகாணசபைக் காலத்திலும் வலியுறுத்தியிருக்கின்றேன்.
இருப்பினும் இதுவரை குறித்த காணியை விடுவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.
முல்லைத்தீவு மாவட்டத்தில் விமானப்படையினர், கடற்படையினர், இராணுவத்தினர், சிவில் பாதுகாப்புப் படையினரின் வரிசையில் பொலிசாரும் மக்களின் காணிகளை அபகரித்து வைத்திருக்கின்றனர்.
எனவே மக்களுடைய அந்த தனியார் காணியை முல்லைத்தீவுப் பொலிசார் உடனடியாக விடுவிக்கவேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றேன்” எனத் தெரிவித்தார்.
(வீடியோ இங்கே )
