13 ஆவது திருத்தத்தை அதில் உள்ளவாறே நடைமுறைப்படுத்துவோம் - சஜித் உறுதி!
ஐக்கிய மக்கள் சக்தி 13 ஆவது திருத்தத்தை அதில் உள்ளவாறே நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார்.
முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் பேசிய அவர், “ நாட்டின் இறையாண்மை, ஆள்புல ஒருமைப்பாடு, அரசியல் சுதந்திரம் ஆகியவற்றை பாதுகாத்து, நாட்டில் வாழும் பல்வேறு சமூகங்களுக்கும் உன்னத ஜனநாயக உரிமைகளை வலுப்படுத்தும் அதிகார பகிர்வுக்கு இந்த மாகாண சபைகள் ஊடாக வழி கிட்டின.
இது நாட்டின் உச்ச சட்டமாதலால் ’13 பிளஸ்’ அல்லது ’13 மைனஸ்’ என நாம் கூற மாட்டோம். இந்நாட்டில் அரசியலை முன்னெடுத்து வரும் பல தரப்பினர் சர்வதேசத்தை சந்தித்த சமயங்களில் ’13 பிளஸ்’ என்று கூறிவிட்டு, நமது நாட்டிற்கு வந்து சில பிரதேசங்களில் கூட்டங்களை நடத்தி, ’13 மைனஸ்’ என்று இரட்டை வேட பேச்சுக்களைப் பேசினர்.
ஐக்கிய மக்கள் சக்தி இத்தகைய இரட்டை வேட பேச்சுக்களைப் பேசாமல், 13 ஆவது திருத்தத்தை அதில் உள்ளவாறே நடைமுறைப்படுத்துவதற்கு ஒரு கட்சியாகவும், அரசியல் சக்தியாகவும் நாம் தயார் எனக் கூறியுள்ளார்.
(வீடியோ இங்கே )
