பல்கலைக்கழக மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மாதம் ரூ. 5,000 கூடுதல் கொடுப்பனவு!

#SriLanka #Lanka4 #University #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
1 month ago
பல்கலைக்கழக மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மாதம் ரூ. 5,000 கூடுதல் கொடுப்பனவு!

நாடாளுமன்ற மாற்றுத்திறனாளிகளுக்கான அவையின் தலைவரும், இலங்கை நாடாளுமன்றத்தின் முதலாவது பார்வை குறைபாடுடைய நாடாளுமன்ற உறுப்பினருமான சுகத் வசந்த டி சில்வா தலைமையில் அண்மையில் நடைபெற்ற அமைச்சுகளுடனான கலந்துரையாடலின் போதே இதற்கான நிதி ஒதுக்கீடுகள் உறுதி செய்யப்பட்டன.

பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) தரவுகளின்படி, பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகும் குறைந்த வருமானம் பெறும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் கல்விச் சுமையைக் குறைப்பதற்காகவே இந்த மாதாந்தம் 5,000 ரூபாய் கூடுதல் கொடுப்பனவு இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் மூலம் (Budget 2026) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாத்தளை, அக்குரம்பொடை (பள்ளேபொல) பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதான நிரோஷன் தனஞ்சய, கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் பார்வை குறைபாட்டினால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 2024 ஆம் ஆண்டில் தனது பார்வையை முழுமையாக இழந்தார். பார்வை இழப்புக்கு சிகிச்சை பெற்று வந்த காலத்தில் ஏற்பட்ட மருந்து ஒவ்வாமை காரணமாக சர்க்கரை நோய் (Diabetes), சிறுநீரகப் பாதிப்பு மற்றும் எலும்புப்புரை (Osteoporosis) போன்ற கடுமையான நோய்களினால் பாதிக்கப்பட்டு சில காலம் படுக்கையிலுமிருந்தார்.

வறுமைக் கோட்டின் கீழ் வாழும் இவரது தந்தை ஒரு விவசாயி ஆவார். குடும்பப் பொருளாதார நிலமையைக் கருத்திற்கொண்டு நிரோஷன் ஒரு கட்டத்தில் தனது மருத்துவச் சிகிச்சைகளைக் கூட நிறுத்திக்கொண்டார்.

பார்வையை இழந்த போதிலும் தனது கல்வியைக் கைவிடாத நிரோஷன், கடந்த 9 மாதங்களாக எவ்வித மேலதிக வகுப்புகளுக்கும் (Tuition) செல்லாமல் இணையதளம் மற்றும் ஆடியோ (Audio) பதிவுகள் மூலம் வீிலிருந்தே சுயகற்றலில் ஈடுபட்டார். இவரது தங்கை பாடப்புத்தகங்களை வாசித்து அதனை ஒலிப்பதிவு செய்து கொடுத்து இவருக்குப் பெரும் துணையாக இருந்துள்ளார்.

பரீட்சை திணைக்களத்தின் விசேட ஏற்பாடு: கலைப் பிரிவில் சிங்களம், பௌத்த நாகரிகம் மற்றும் ஐரோப்பிய வரலாறு ஆகிய பாடங்களில் பரீட்சை எழுதிய இவருக்கு, வினாத்தாள்களை வாசிப்பதற்கும் விடைகளைப் பதிவு செய்வதற்கும் பரீட்சை திணைக்களம் இரு உதவியாளர்களை வழங்கியிருந்தது. 

இந்த நிலையில், கடந்த உயர்தரப் பரீட்சையில் 3 'A' சித்திகளைப் பெற்று, மாத்தளை மாவட்டத்தில் 31ஆவது இடத்தைப் பிடித்து கொழும்பு அல்லது பேராதனைப் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகியுள்ளார்.

எதிர்காலத்தில் ஒரு ஆசிரியராக வர வேண்டும் என்ற இலட்சியத்தோடு இருக்கும் நிரோஷனை நேரில் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா, இவரைப் போன்ற மாணவர்களைத் தேசிய மட்டத்தில் ஊக்குவிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

அத்துடன், மாற்றுத்திறனாளிகளுக்காக அரசாங்கம் முன்னெடுக்கும் விசேட வீடமைப்புத் திட்டத்தின் கீழ், இவர்களது வீடுகளைப் புனரமைக்க 5 இலட்சம் ரூபாயும், புதிய வீடு கட்டுவதற்கு 10 இலட்சம் ரூபாயும், மற்றும் அவர்களது தேவைகளுக்கேற்ப விசேட கழிவறைகளை அமைக்க 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாயும் நிதி உதவி வழங்கப்படும் என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4