ஒரே நாளில் 274 பேர் எவரெஸ்ட் சிகரத்தை ஏறி புதிய உலக சாதனை: நேபாள சுற்றுலாத்துறை அறிவிப்பு!
உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் சிகரத்தை ஒரே நாளில் 274 மலையேற்ற வீரர்கள் நேபாளப் பகுதி வழியாக ஏறி புதிய உலக சாதனை படைத்துள்ளனர். இதன் மூலம் இதற்கு முன்னர் நிலவிய சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
நேபாளம் மற்றும் சீனாவின் திபெத் பகுதிக்கு இடையில் அமைந்துள்ள 8,849 மீற்றர் (29,032 அடி) உயரமுடைய எவரெஸ்ட் சிகரத்துக்கு இரு பக்கங்களிலிருந்தும் ஏற முடியும் என்ற போதிலும், இந்தத் தடவை சீன அதிகாரிகள் மலை ஏறுவதற்கான அனுமதியை வழங்கவில்லை.
இதன் காரணமாக திபெத் பகுதி வழியாக மலையேறுபவர்கள் எவரும் செல்லவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் நேபாளப் பகுதி வழியாக ஒரே நாளில் அதிகளவிலானோர் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த சாதனை 2019ஆம் ஆண்டு மே 22 அன்று பதிவாகியிருந்தது.
அன்று ஒரே நாளில் 223 பேர் சிகரத்தை அடைந்தமையே முன்னைய சாதனையாக இருந்தது என்று நேபாள பயண இயக்குநர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரிஷி பண்டாரி தெரிவித்துள்ளார்.
தற்போது அந்தச் சாதனை முறியடிக்கப்பட்டு, ஒரே நாளில் 274 பேர் சிகரத்தை எட்டி புதிய வரலாற்று சாதனைப் பதிவை ஏற்படுத்தியுள்ளனர்.
அனுகூலமான வானிலை நிலவியமையே ஒரே நாளில் இவ்வளவு அதிகமான மலையேற்ற வீரர்கள் சிகரத்தை அடையக் காரணம் என நேபாள அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
(வீடியோ இங்கே )