அரசின் புதிய வரிக் கொள்கைக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடும் கண்டனம்!
அரசாங்கம் முன்னெடுத்து வரும் புதிய வரிக் கொள்கை மற்றும் வரி நிர்வாக நடைமுறைகள் ஜனநாயகத்திற்கும், மனித உரிமைகளுக்கும் எதிரானது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (18) இடம்பெற்ற வரி நிபுணர்கள் மற்றும் தொழில்முனைவோருடனான சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தவறுதலாகவோ அல்லது கவனக்குறைவாகவோ வரி நிர்வாக நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறுவதை ஒரு குற்றச் செயலாகக் கருதி, சிறையில் அடைப்போம் என்று மிரட்டுவது அடிப்படை மனித உரிமை மீறலாகும்.
இத்தகைய அச்சுறுத்தல்கள் புதிய தொழில்முயற்சிகள் உருவாவதைத் தடுப்பதோடு, ஏற்கனவே உள்ள வியாபாரங்களை விரிவுபடுத்துவதற்கும் பெரும் தடையாக அமையும்.
இது வேலைவாய்ப்பு உருவாக்கத்தையும் கடுமையாகப் பாதிக்கும். இந்த புதிய விதிகள் நீதித்துறையின் அதிகாரத்திற்கே சவால் விடுப்பதாக அமைந்துள்ளன.
சட்டவாக்கம், நிர்வாகம் மற்றும் நீதித்துறை ஆகியவற்றுக்கு இடையேயான அதிகாரப்பகிர்வு மற்றும் சமன்பாடுகளை அரசாங்கம் இதன்மூலம் மீறுகின்றது.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இலக்குகளை மீறிச் செல்வதற்கு அரசாங்கம் முற்படுவதன் விளைவாகவே, வரி நிர்வாகத்திற்கும் குற்றச் செயல்களுக்கும் இடையே இத்தகைய ஆபத்தான தொடர்பு ஏற்படுத்தப்படுவதாக சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.
(வீடியோ இங்கே )