பெருந்தோட்ட மக்களில் ஆண்களை விடப் பெண்களே அதிகளவில் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்: ஆய்வு தகவல்!
#SriLanka
#Women
#world_news
#Men
#students
#ImportantNews
Lakhi
3 hours ago
இலங்கையின் பெருந்தோட்டப்புறங்களிலிருந்து வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காகச் சென்றுள்ளவர்களில் ஆண்களை விடப் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து காணப்படுவதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டின் சனத்தொகை மற்றும் வீடமைப்புத் தொகைமதிப்பு அறிக்கையின்படி, இலங்கையிலிருந்து தற்காலிகமாக வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்தோர் தொடர்பான விரிவான தரவுகள் பல முக்கிய சமூகப் பொருளாதாரப் போக்குகளை வெளிப்படுத்துகின்றன.
இந்த ஆய்வில், ஆறு மாதங்களுக்கும் மேலாகத் தற்காலிகமாக வெளிநாடுகளில் வசிக்கும் அல்லது அத்தகைய நோக்குடன் சென்ற 672,249 நபர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஆண்களின் பங்களிப்பு 61.4 சதவீதமாகவும் பெண்களின் பங்களிப்பு 38.6 சதவீதமாகவும் காணப்படுவதுடன், இந்தத் தரவுகள் அனைத்தும் இலங்கையில் உள்ள அந்தந்த வீடுகளின் எஞ்சிய உறுப்பினர்களிடமிருந்து திரட்டப்பட்டுள்ளன.
மாவட்ட ரீதியான பரம்பலை அவதானிக்கும்போது, இலங்கையின் பொருளாதார மையங்களாகத் திகழும் கம்பஹா, கொழும்பு மற்றும் குருணாகலை ஆகிய மாவட்டங்களிலிருந்தே அதிகளவானோர் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். குறிப்பாக கம்பஹா மாவட்டத்திலிருந்து 12.8 சதவீதத்தினரும், கொழும்பு மாவட்டத்திலிருந்து 10.6 சதவீதத்தினரும் தற்காலிகமாக வெளிநாடுகளில் வசிக்கின்றனர். இதற்கு நேர்மாறாக, மன்னார், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் மிகக்குறைந்த சதவீதத்தினர் (தலா 0.2 வீதம்) பதிவாகியுள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானோர் கிராமப்புறத் துறையைச் சேர்ந்தவர்களாக இருக்கின்ற போதிலும், தோட்டப்புறத் துறையில் மாத்திரம் ஆண்களை விடப் பெண்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து காணப்படுவது ஒரு தனித்துவமான அம்சமாகும். வயதுப் பிரிவுகளின் அடிப்படையில் நோக்குகையில், நாட்டின் உழைக்கும் சக்தியாகக் கருதப்படும் 30 முதல் 59 வயதுக்குட்பட்ட பிரிவினரே 66.8 சதவீத பங்களிப்புடன் முன்னிலையில் உள்ளனர். 18 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் 27.9 சதவீதமாகவும், 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் 2.4 சதவீதமாகவும் காணப்படுகின்றனர்.
புலம்பெயர்வுக்கான முதன்மைக் காரணியாகத் தொழில் வாய்ப்பு விளங்குவதுடன், மொத்த எண்ணிக்கையில் 86 சதவீதமானோர் வேலைவாய்ப்புக்காகவே வெளிநாடு சென்றுள்ளனர். கல்விக்காகப் புலம்பெயர்ந்தோர் 8 சதவீதமாக இருப்பதுடன், அவர்கள் பெரும்பாலும் 18 முதல் 29 வயதுக்குட்பட்ட பிரிவினராகவும், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாகவும் உள்ளனர். நாடுகளின் அடிப்படையில் பார்க்கும்போது, மத்திய கிழக்கு நாடுகள் இலங்கைத் தொழிலாளர்களின் பிரதான இலக்காகத் தொடர்ந்தும் நீடிக்கின்றன. ஒட்டுமொத்தமாக குவைத், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் அதிகப்படியான இலங்கையர்கள் வசிக்கின்றனர்.
பாலின ரீதியாக நோக்குகையில், தொழில் நிமித்தம் செல்லும் ஆண்களில் 18.3 சதவீதத்தினர் ஐக்கிய அரபு இராச்சியத்தையும், பெண்களில் 34.3 சதவீதத்தினர் குவைத் நாட்டையும் தெரிவு செய்துள்ளனர். அதேவேளை, உயர்கல்வியைத் தொடர்வதற்காக வெளிநாடு செல்பவர்களில் பெரும்பாலானோர் அவுஸ்திரேலியா (24.1 வீதம்) மற்றும் ஜப்பான் (21.3 வீதம்) ஆகிய நாடுகளைத் தெரிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இவை தவிர, குடும்ப உறுப்பினர்களைப் பராமரிப்பதற்காக அல்லது அவர்களுடன் தங்குவதற்காக இத்தாலி போன்ற நாடுகளுக்குச் செல்லும் போக்கும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
(வீடியோ இங்கே )