அழிவே போரின் அறுவடை- சுவிசில் இருந்து சண் தவராஜா
போர்கள் எப்போதும் அழிவுகளையே பரிசாகத் தருகின்றன. பெறுமதியான மனித உயிர்கள் மாத்திரமன்றி, பொருண்மிய, கட்டுமான அழிவுகள் என மனித குலத்தின் வளர்ச்சியைப் பின்னோக்கித் தள்ளும் விளைவுகளையே போர்கள் ஏற்படுத்துகின்றன.
போரின் விளைவால் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு தனியானது. இத்தகைய விளைவுகள் கிடைக்கும் என்பதை நன்றாகத் தெரிந்தும் போரற்ற உலகத்தை உருவாக்க பெரும்பாலான நாடுகள், நாடுகளின் தலைவர்கள் பின் நிற்கின்றனர் என்பது வரலாற்றுத் துயரம்;. காலங்காலமாக இத்தகைய யதார்த்தம் நிரூபிக்கப்பட்டு வருகின்ற போதிலும் போர்கள் சிறிய அளவிலும், பாரிய அளவிலும் தொடரவே செய்கின்றன.
காரணங்கள் எதுவாக இருந்தாலும் போர்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதே உலகில் வாழும் பெரும்பாலான மக்களின் பெரு விருப்பாக உள்ளது.
'இலட்சியங்கள் மாத்திரம் உன்னதமாய் இருந்தால் போதாது. அவற்றை அடையும் வழிமுறைகளும் உன்னதமாக இருக்க வேண்டும்' என்ற கிரேக்க தத்துவஞானி பிளாட்டோவின் மேற்கோளில் இருந்து பாடம் கற்க உலகம் தொடர்ந்து தவறி வருவதைப் பார்க்க முடிகின்றது.
போர்களுக்கு ஆதரவான குரல்கள் மக்கள் மத்தியில் இருந்து வெளி வருவதைப் போன்று போர்களுக்கு எதிரான குரல்களும் உலகம் முழுவதிலும் இருந்து வெளிவந்த வண்ணமே உள்ளது.
தற்போது ஈரானை இலக்கு வைத்து உலக வல்லரசான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் மேற்கொள்ளும் போரில் கூட எதிர்ப்புக் குரல்கள் அமெரிக்காவிலும் இஸ்ரேலிலும் இருந்து பலமாக வெளிவருவதைப் பார்க்க முடிகின்றது.
உலகம் முழுவதிலும் இருந்து எழும் ஈரான் ஆக்கிரமிப்பு யுத்தத்துக்கு எதிரான வெகுமக்களின் குரல்களால் ஒருவேளை இந்தப் போரை நிறுத்துவதற்கான அழுத்தத்தை வழங்க முடியாமல் போகக் கூடும்.
ஆனால், போரில் ஈடுபடும் ஆட்சியாளர்களுக்கு எதிராக நாம் தக்க நேரத்தில் குரல் எழுப்பினோம் என்ற உளத் திருப்தி இத்தகைய போராட்டங்களில் பங்கு கொண்ட மக்களுக்குக் கிட்டும் என்பது நிச்சயம். போர் தொடர்பில் பாராமுகமாக இருப்போர் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்களுள் இதுவும் ஒன்று. 'நாடென்ன செய்தது நமக்கு? எனக் கேள்விகள் கேட்பது எதற்கு? நீ என்ன செய்தாய் அதற்கு? என நினைத்தால் நன்மை உனக்கு' என்ற தமிழ்த் திரைப்படப் பாடல் வசனம் இன்றைய சூழ்நிலைக்கு மிகவும் பொருத்தமானது.
ஈரானுக்கு ஆதரவு தெரிவித்து சமூக ஊடகங்களில் பதிவுகளை இடுவதால் மாத்திரம் ஈரானுக்கு எதிரான போரை நிறுத்திவிட முடியாது. நம்மால் முடியாது விட்டாலும் மற்றவர்கள் முன்னெடுக்கும் போராட்டங்களில் நேரடியாகக் கலந்து கொண்டு ஆதரவு வழங்குவதற்கு ஊடாக நாமும் ஏதோ செய்தோம் என்ற திருப்தியையாவது பெற முடியும்.
இன்றைய தருணத்தில் உலகில் மிகவும் பலம் பொருந்திய நாடாக அமெரிக்காவே உள்ளது. மத்திய கிழக்கைப் பொறுத்தவரை இஸ்ரேல் நாட்டின் பலத்துக்கு ஈடாக வேறு எந்த நாடும் இல்லை. அணு ஆயுதங்களைக் கொண்டுள்ள ஒரேயொரு நாடாக மத்திய கிழக்கில் விளங்கும் இஸ்ரேல், போதாதற்கு அமெரிக்காவின் நிபந்தனையற்ற முழு ஆதரவையும் கொண்டிருக்கின்றது.
இந்நிலையில், தலைகீழாக நின்றாலும் ஈரான் நாட்டால் இந்தப் போரில் வெற்றிபெற முடியாது. எனினும், முடிந்தளவு தனது எதிர்ப்பைப் பதிவுசெய்து வருகிறது.
பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் ஈரான் நாட்டின் பதில் தாக்குதல்கள் அமெரிக்காவையும், இஸ்ரேலையும் கடும் பாதிப்புக்கு ஆளாக்கி வருவதாக பல ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டு வருவதை சமூக ஊடகங்களில் பார்க்க முடிகின்றது.
அவர்களைப் பொறுத்தவரை அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும், அவற்றின் நேச நாடுகளுக்கும் ஈரான் பேரழிவை ஏற்படுத்துவதாக அவர்கள் காட்சிப்படுத்த முனைகிறார்கள்.
அவர்களை நினைத்து அழுவதா, சிரிப்பதா எனத் தெரியவில்லை. அமெரிக்கப் படைத்துறை வல்லமையை அவர்கள் குறைத்து மதிப்பிடுகிறார்கள் என்பதே உண்மை. அது மாத்திரமன்றி ஈரான் மீதான அழிவுகரமான போருக்கு ஒரு வகையில் அவர்கள் நியாயம் கற்பிக்க உதவுகிறார்கள் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்.
யார் பலவான் என்பதை நிரூபிப்பதற்கான களமோ, தருணமோ இதுவல்ல. போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் அவசரமாகவும் அவசியமாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அதற்கான ஒரு முயற்சியில் பாகிஸ்தான் தலைமையிலான சில நாடுகள் ஈடுபட்டு வருவதைப் பார்க்க முடிகின்றது. முதற் கட்டமாக துருக்கி, எகிப்து, சவூதி அரேபியா ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களை இஸ்லாமாபாத்தில் சந்தித்து உரையாடிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஸாக் தார், தொடர்ந்து சீனத் தலைநகரில் வெளியுறவு அமைச்சர் வாங் ஜியைச் சந்தித்து உள்ளார் எனச் செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்தச் சமரச முயற்சி போரை வெறுக்கும் அனைவருக்கும் உவப்பான செய்தியாக உள்ளது. இந்த முயற்சி வெற்றியளிக்க வேண்டும் என்பதே அமைதியை விரும்பும் உலக மாந்தர் அனைவரதும் ஒரே விருப்பாக உள்ளது.
சமரசம் என்பது விட்டுக் கொடுப்புடன் கூடியதே. யார் எதனை விட்டுக் கொடுக்கிறார்கள் என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. குடிமக்களைப் பாதுகாப்பதற்காக சுய மரியாதையைத் தவிர வேறு எதனையும் விட்டுக் கொடுக்க முடியும்.
கொள்கை, கோட்பாடுகள் மக்கள் நலன் சார்ந்தவையாகவே இருக்க வேண்டும். மக்கள் இல்லாத சூனியத்தை ஆட்சி செய்வதில் அர்த்தம் இல்லை என்பதை பேச்சுவார்த்தையில் ஈடுபடும் தரப்புகள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஈரான் மீதான போர் ஏற்படுத்தியுள்ள பொருளாதார நெருக்கடி உலகம் முழுவதிலும் உணரப்படக் கூடியதாக உள்ளது. போரில் நேரடியாக ஈடுபடும் நாடுகளில் ஏற்படும் அழிவுகளுக்கு அப்பால், எரிபொருட்களின் விலை உயர்வு, மத்திய கிழக்கு நாடுகளில் பறிபோகும் புலம்பெயர் தொழிலாளர்களின் வேலை வாய்ப்புகள் என்பன மூன்றாம் உலக நாடுகளை வெகுவாகப் பாதித்து வருகின்றன.
பொருளாதார வளர்ச்சியில் ஏலவே பின்தங்கியுள்ள இத்தகைய நாடுகள் தற்போதைய போர் காரணமாக மேலும் பின்னடைவைச் சந்தித்து வருகின்றன. போர் முடிவுக்கு வந்தாலும் இந்த நாடுகள் சந்தித்துள்ள பொருண்மியப் பிரச்சனை
தற்போதைய நிலையில் இந்தப் பிராந்திய நாடுகளின் உள்நாட்டு மொத்த உற்பத்தி 3.7 விழுக்காடு முதல் 6 விழுக்காடு வரை குறைவதற்கான வாய்ப்பு உள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
அண்ணளவாக 120 பில்லியன் டொலர் முதல் 194 பில்லியன் டொலர் வரையான இழப்பு ஏற்படலாம் எனக் கவலை தெரிவிக்கிறது இந்த அறிக்கை. 3.7 மில்லியன் வரையானார் தங்கள் தொழில்களை இழக்கும் வாய்ப்பு உள்ளதாகவும், 4 மில்லியன் வரையானோர் வறுமைக் கோட்டின் கீழ் தள்ளப்படும் வாய்ப்பு உள்ளதாகவும் இந்த அறிக்கை கூறுகிறது.
குறிப்பாக லெபனான், யேமன், சூடான் ஆகிய நாடுகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக அந்த அறிக்கை மேலும் தெரிவிக்கிறது. போர் மேலும் நீடித்தால் நிலைமை மேலும் மோசமாகும் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரியும் உண்மை.
அதேவேளை, போர் உடனடியாக முடிவுக்கு வந்தாலும் போரின் பாதிப்பில் இருந்து மத்திய கிழக்குப் பிராந்தியமும், ஒட்டு மொத்த உலகமும் பழைய நிலைக்குத் திரும்ப குறைந்தது ஆறு மாதங்களாவது எடுக்கும் என அந்த அறிக்கை கூறுகிறது.
செல்வந்த நாடுகள் தற்போதைய நிலைமையை ஓரளவேனும் சமாளிக்கக் கூடிய வல்லமையைக் கொண்டிருக்கின்றன. ஆனால், ஏற்கனவே பொருளாதாரப் பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ள நாடுகளால் எப்படிச் சமாளிக்க முடியும்? போரைத் தொடங்கியவர்களுக்கு அதைப் பற்றிய கரிசனை இருக்கும் என எதிர்பார்ப்பது மடமை.
எனவே, போரை நிறுத்துவதற்கான அழுத்தத்தை உலக மாந்தர் அனைவரும் இணைந்து வழங்க வேண்டியதே தற்போது உள்ள உடனடித் தேவை.
(வீடியோ இங்கே )