ஈரானுக்கு எதிரான மனித உரிமைத் தடைகளை மேலும் ஓராண்டுக்கு நீடித்தது ஐரோப்பிய ஒன்றியம்!
ஈரானில் இடம்பெற்று வரும் பாரதூரமான மனித உரிமை மீறல்களைக் கருத்திற்கொண்டு, அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எதிர்வரும் 2027ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் திகதி வரை நீடிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றிய பேரவை தீர்மானித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்தத் தடைகளின் கீழ், ஈரானிய அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்களுக்கான பயணத் தடை, அவர்களின் சொத்துக்களை முடக்குதல், உள்நாட்டு அடக்குமுறைகளுக்குப் பயன்படுத்தக்கூடிய உபகரணங்கள் மற்றும் தொலைத்தொடர்பு கண்காணிப்பு கருவிகளை ஈரானுக்கு ஏற்றுமதி செய்வதற்கான தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்தத் தடைப் பட்டியலில் தற்போது மொத்தம் 262 தனிநபர்களும் 53 நிறுவனங்களும் உள்வாங்கப்பட்டுள்ளன.
அண்மையில் உயிரிழந்த நபர் ஒருவர் இந்தப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த எண்ணிக்கை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், பட்டியலில் உள்ள நபர்களுக்கோ அல்லது நிறுவனங்களுக்கோ நிதி வழங்குவது ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகளுக்கும் நிறுவனங்களுக்கும் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
ஈரானில் இடம்பெறும் மனித உரிமை அத்துமீறல்களுக்கு எதிராக 2011ஆம் ஆண்டு முதன்முதலில் இந்தத் தடை முறையை அறிமுகப்படுத்திய ஐரோப்பிய ஒன்றியம், அதனை ஆண்டுதோறும் நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )