சிவஞானம் சிறீதரன் தலைமையில் கிளிநொச்சியில் நடந்த காணி சுவீகரிப்புக்கு எதிரான போராட்டம்

#SriLanka #Protest #people #Lanka4 #land #Sridaran_MP #L4
Prasu
4 months ago
சிவஞானம் சிறீதரன் தலைமையில் கிளிநொச்சியில் நடந்த காணி சுவீகரிப்புக்கு எதிரான போராட்டம்

கிளிநொச்சி மாவட்டம், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஊர்வணிக்கன்பற்று கிராமத்தில், இராணுவத் தேவைக்காக முன்னெடுக்கப்படவிருந்த காணி சுவீகரிப்பு நடவடிக்கைக்கு எதிராக பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. 

மக்களின் பலத்த எதிர்ப்பினைத் தொடர்ந்து, திட்டமிடப்பட்டிருந்த நில அளவை நடவடிக்கை தற்காலிகமாகக் கைவிடப்பட்டது. ​இலங்கை இராணுவத்தின் 4 ஆவது பட்டாலியன் படைப்பிரிவின், மின் மற்றும் இயந்திரப் பொறியியல் படையணி அமைப்பதற்காக 25.73 ஏக்கர் தனியார் காணிகளைச் சுவீகரிக்கும் நோக்குடன் இந்த நில அளவை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 

அரசாங்க நில அளவையாளர் திரு. வ. நிதர்சன் அவர்களால் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ அறிவித்தலின்படி, காணி சுவீகரிப்புச் சட்டத்தின் 4 ஆம் பிரிவின் கீழ் இன்று காலை 9:00 மணியளவில் பணிகள் ஆரம்பிக்கப்படவிருந்தன. ​

குறித்த நிலமானது இராணுவ முகாம் அமைப்பதற்காகவே சுவீகரிக்கப்படுவதை அறிந்த பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் திரு. சுப்பிரமணியம் சுரேன், இந்த ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். ​

images/content-image/1775147847.jpg

அதன்படி, இன்று காலை 8.00 மணி முதல் காணி உரிமையாளர்களும் பொதுமக்களும் ஒன்றுகூடித் தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

போராட்டத்தில் கலந்துகொண்ட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில்: ​"பச்சிலைப்பள்ளி பகுதியில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகள் இதுவரை விடுவிக்கப்படாத நிலையில், அவற்றை இராணுவத் தேவைகளுக்காக வலுக்கட்டாயமாக அளவீடு செய்யும் முயற்சி இன்று முன்னெடுக்கப்பட்டது. 

images/content-image/1775147877.jpg

தமது பூர்வீக நிலங்களை இழந்து நிற்கும் உரிமையாளர்களும், அவர்களுக்கு ஆதரவாக நாங்களும் இணைந்து இந்த அநீதியான அளவீட்டுப் பணியைத் தடுத்து நிறுத்தினோம். ​தமிழ் மக்களின் பெரும்பான்மையான நிலப்பரப்புகள் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டு இன்னும் விடுவிக்கப்படாமல் உள்ளன. 

இன்றும் தமிழ் மக்கள் ஒரு 'திறந்தவெளிச் சிறைச்சாலைக்குள்' வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதற்கு இத்தகைய நில ஆக்கிரமிப்பு முயற்சிகளே சான்றாகும். 

images/content-image/1775147906.jpg

சொந்தக் காணி இல்லாமல், அருகில் உள்ள பள்ளமான பகுதிகளில் தற்காலிகமாக வசிக்கும் மக்கள், மழைக்காலங்களில் வெள்ள அனர்த்தத்தினால் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வருகின்றனர். 

மக்களின் காணிகள் முழுமையாக விடுவிக்கப்படும் வரை எமது ஜனநாயகப் போராட்டங்கள் தொடரும்," எனத் தெரிவித்தார். ​மக்களின் இடைவிடாத எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து, நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் அங்கிருந்து வெளியேறியதுடன், இன்றைய அளவீட்டுப் பணிகளும் நிறுத்தப்பட்டன.

images/content-image/1775147988.jpg

குறித்த போராட்டத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன், கரைச்சிப் பிரதேச சபையின் தவிசாளர் அருணாச்சலம் வேழமாலிகிதன், பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன், பிரதேச சபைகளின் கௌரவ உறுப்பினர்கள், மதத்தலைவர்கள், காணி உரிமையாளர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்."

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4