பணத்துக்காக நடந்த கொலையா? மட்டக்களப்பு சம்பவத்தின் பின்னணியில் சிக்கும் மர்ம நபர்கள்.
மட்டக்களப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள, கொள்ளைகளுக்காக மயக்க மருந்து கொடுத்து பெண்களை கடத்தி, கொலை செய்யும் குழு தொடர்பில் மற்றும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
பெண்களின் தாலி உள்ளிட்ட தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட பின்னர், அவர்களை கிணற்றில் வீசி எறிந்து கொலை செய்து வந்த குழுவுடன்; தொடர்புபட்ட மற்றுமொரு சந்தேக நபரான 37 வயதுடைய முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் மயக்கத்துக்கு பாவிக்கும் தெளி கருவியுடன் மருந்துகளும் மீட்கப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண பாரிய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெய்வநாயகம் மேனன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த 20ஆம் திகதி கொக்கட்டிச்சோலை நெல்லிக்காட்டு வயல் பிரதேசத்தில் பாழடைந்த கிணற்றில் இருந்து வவுணதீவு கொத்தியாவல பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயது இளம் தாய் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார்.
அவர் வழங்கிய தகவலின்படி, அவரின் 3 வயதும் சிறுமி வயல் பகுதியில் தனித்துவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார். அத்துடன், ஏற்கனவே காணாமல் போனதாகக் கருதப்பட்ட மற்றொரு பெண் ஒருவர், குறித்த கிணற்றில் இருந்தும் உடலமாக மீட்கப்பட்டார்.
இந்த சம்பவங்கள் தொடர்பாக கிழக்கு மாகாண பிரதி காவல்துறை மா அதிபர் வர்ண ஜயசுந்தரவின் வழிகாட்டலில் காவல்துறைக் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இதன்போது வவுணதீவு காஞ்சிரம்குடா பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய பெண் அவரது 34 வயதுடைய கணவர் அவரது 22 வயதுடைய தம்பி; மற்றும் கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்களை கொள்வனவு செய்த ஊறணி, திருகோணமலை, வீதிகளைச் சேர்ந்த இரண்டு நகையக உரிமையாளர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
அத்துடன் கொள்ளைக் குழுவிடம் இருந்து, இரண்டு முச்சக்கர வண்டிகளும் சிற்றூந்து ஒன்றும்,கோடரி உட்பட்ட கூரிய ஆயுதங்களும் மீட்கப்பட்டன.
இதனையடுத்து, கைது செய்யப்பட்டவர்களை கடந்த 22ஆம் திகதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது, தங்க ஆபரணங்களை கொள்வனவு செய்த உரிமையாளர்கள் இருவரையும் 27 வரை விளக்கமறியலில் வைக்குமாறும், கொலை கொள்ளையில் ஈடுபட்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை 72 மணித்தியால தடுப்பில் வைத்து விசாரணைக்கு செய்வதற்கும் நீதவான் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை இரவு கொள்ளையர்களின் காஞ்சிரம்குடா வீட்டை முற்றுகையிட்ட காவல்துறையினர்,நிலத்தில் இரண்டு அடி ஆழத்தில் பாதுகாப்பாக பொலித்தீன் பைகளில் சுற்றி வைக்கப்பட்டிருந்த மருத்துவமனைகளில்; சத்திர சிகிச்சையின் போது பாவிக்கப்படும் 6 மயக்க மருந்துகளை கொண்ட போத்தல் மற்றும் மயக்க மாத்திரைகளை கைப்பற்றினர்.
அதனை தொடர்ந்து கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் வீடு ஒன்றை முற்றுகையிட்டு 37 வயதுடைய முச்சக்கர வண்டி ஓட்டுனர் ஒருவரை கைது செய்தனர்.
அவரது வீட்டின் நிலத்திலும் புதைக்கப்பட்டிருந்த கொள்ளையர்கள் பயன்படுத்தி வந்த மயக்கத்துக்கு பாவிக்கும் தெளி கருவி போத்தல் ஒன்றை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
இந்தநிலையில், மட்டக்களப்பில் பீதியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவங்களின் பின்னணியில் உள்ள முழுமையான வலையமைப்பை கண்டறியும் நோக்கில் கிழக்கு மாகாண விசேட குற்ற விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேநேரம் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்று வெள்ளிக்கிழமை (27) மீண்டும் நீதிமன்றத்தில் இடம்பெறவுள்ளன.
செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்