முடிவுக்கு வந்த நீண்ட தேடல்; மர்மமான முறையில் காணாமல் போன தம்பதி சடலங்களாகக் கண்டெடுப்பு.
கொரோனா காலத்தில் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்ட தம்பதியினர், கொலை செய்யப்பட்டு துண்டு துண்டாக வெட்டப்பட்டு வாய்க்காலில் புதைக்கப்பட்ட அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
கிராண்ட்பாஸ் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட வெல்லம்பிட்டிய, கம்பிக்கொட்டுவ வத்தை பகுதியில் உள்ள வாய்க்கால் ஒன்றிலிருந்து நேற்று(24) இவர்களின் உடல் எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
கடந்த 2020-ஆம் ஆண்டு 62 வயதான சுனில் குமாரசிங்க மற்றும் கமண்டா சில்வா ஆகிய தம்பதியினர் காணாமல் போனதாக அவர்களது உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆரம்பகட்ட விசாரணைகளில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், உறவினர்கள் ஜனாதிபதி செயலகத்திடம் மேன்முறையீடு செய்தனர். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது.
சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் இந்திகா லோகுஹெட்டி தலைமையிலான குழுவினர், பாதிக்கப்பட்ட தம்பதியினரின் வீட்டிற்கு அருகில் வசித்து வந்த தம்பதியிடம் விசாரணை நடத்தினர்.
அதில், தனிப்பட்ட தகராறு காரணமாக தம்பதியினர் கொலை செய்யப்பட்டு, உடல்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு அருகில் உள்ள வாய்க்காலில் புதைக்கப்பட்டமை தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக ஒரு தம்பதி மற்றும் அவர்களது உதவியாளர் என மூவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்