15 மில்லியன் ரூபா பெறுமதியான சிகரெட் கடத்தல் முறியடிப்பு - இருவர் கைது!
வெளிநாட்டில் இருந்து சுமார் 15 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கடத்தி வர முயன்ற இலங்கை பிரஜைகள் இருவர் இன்று (25) காலை பண்டாரநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
டுபாயில் இருந்து இன்று அதிகாலை 3.15 மணியளவில் FlyDubai (FZ-569)என்ற வானூர்தி மூலம் கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தை வந்தடைந்த இரு பயணிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமது பயணப் பொதிகளில் எவ்விதமான வரி செலுத்த வேண்டிய பொருட்களும் இல்லை எனக் கூறி, வானூர்தி நிலையத்தில் இருந்து வெளியேற முயன்ற போதே அங்கிருந்த காவல்துறை மற்றும் சுங்க அதிகாரிகளினால் இவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
சந்தேக நபர்களின் 8 பயணப் பொதிகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்த போது, அவற்றுக்குள் மிக நுணுக்கமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த Manchester மற்றும் Platinum ரகத்தைச் சேர்ந்த 500 கார்டன் வெளிநாட்டு சிகரெட்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
இவற்றில் சுமார் 1,00,000 சிகரெட் துண்டுகள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். கைப்பற்றப்பட்ட இந்த சிகரெட்டுகளின் மொத்த பெறுமதி சுமார் 15 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தற்போது வானூர்தி நிலைய சுங்கப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்