மின்சாரக் கட்டணம் மீண்டும் உயரும் அபாயம்? சஜித் பிரேமதாச கடும் விமர்சனம்.!
தற்போதைய அரசாங்கம் தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டு, மக்களைப் பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
பொரள்ளை மேகசின் வீதி விழா மண்டபத்தில் நடைபெற்ற "அநுர Fail" மக்கள் தெளிவூட்டல் கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்
ஜனாதிபதித் தேர்தலின் போது மின்சாரக் கட்டணத்தை 33 சதவீதத்தால் குறைப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அநுரகுமார திஸாநாயக்க, இப்போது கட்டணத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
"9000 ரூபா மின் கட்டணத்தை 6000 ரூபாவாகக் குறைப்பேன் என்று கூறி வாக்குகளைப் பெற்றவர்கள், இன்று மக்களை ஏமாற்றி வருகின்றனர்" என அவர் குறிப்பிட்டுள்ளார்
துறைமுகத்தில் இறக்கப்படும் விலைக்கே எரிபொருளை வழங்குவதாகக் கூறிய அரசாங்கம், தற்போது நான்கு வகையான வரிகளை விதித்து மக்களின் சுமையைக் கூட்டியுள்ளது.
மத்திய கிழக்கு போரைக் காரணம் காட்டி தப்பிக்க முடியாது எனச் சுட்டிக்காட்டிய அவர், இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் மீதான VAT உள்ளிட்ட வரிகளை நீக்கினால் மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியும் என்றார்.
"கடந்த காலத்தில் விலை சூத்திரத்தை ஊழல் நிறைந்தது என்று விமர்சித்த திசைக்காட்டி அரசாங்கம், இன்று அதே சூத்திரத்தின் அடிமையாக மாறியுள்ளது.
உலக சந்தையில் எண்ணெய் விலை குறைந்தாலும் இலங்கையில் அதன் பயன் மக்களுக்குக் கிடைப்பதில்லை. வரி மற்றும் கமிஷன்களை நீக்குவோம் என்று மேடைகளில் முழங்கியவர்கள் இன்று அனைத்தையும் மறந்துவிட்டனர்," என அவர் சாடினார்.
மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவும் சூழலில், அங்குள்ள இலங்கைத் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து அரசாங்கத்திடம் எந்தத் திட்டமும் இல்லை.
கடந்த காலங்களில் ரணசிங்க பிரேமதாச இக்கட்டான சூழலில் தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்கியதை நினைவூட்டிய அவர், தற்போதைய அரசு எதிர்க்கட்சியின் ஆலோசனைகளைச் சமூக வலைத்தளங்களில் கேலி செய்வதில் மட்டுமே குறியாக இருப்பதாகத் தெரிவித்தார்.
செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்