பயணிகளை பாதியில் இறக்கிவிட்ட தனியார் பேருந்துக்குத் தடை!!
பொதுப்பயணிகளை இடையில் இறக்கிவிட்டு, தனியார் நிறுவன ஊழியர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து மற்றும் அதன் நடத்துனருக்கு எதிராக வட மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர், பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில், கடந்த மார்ச் 14 ஆம் திகதி (14.03.2026), குறிப்பிட்ட தனியார் பேருந்தில் பயணித்த பயணிகள், "பேருந்து பழுதடைந்துவிட்டது" எனக் கூறி நடத்துனரால் பாதியில் இறக்கிவிடப்பட்டுள்ளனர்.
ஆனால், சிறிது நேரத்திலேயே அதே பேருந்து ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் பணியாளர்களை ஏற்றிச் சென்றதை அவதானித்த பயணி ஒருவர், இது குறித்து ஆதாரங்களுடன் அதிகார சபையிடம் முறைப்பாடு செய்திருந்தார்.
பாதிக்கப்பட்ட பயணியின் முறைப்பாட்டின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், பேருந்து வேண்டுமென்றே பயணிகளை இறக்கிவிட்டது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து குறித்த தனியார் பேருந்து சேவையில் ஈடுபடுவதற்கு 3 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. பயணிகளுடன் முறையற்ற வகையில் நடந்துகொண்டமைக்காக நடத்துனருக்கு 5 நாட்கள் பணி இடைநீக்கம் விதிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் இவ்வாறான தவறுகள் இடம்பெறாது என நடத்துனரிடம் இருந்து எழுத்துமூல உறுதியுரை பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பான மற்றும் தரமான போக்குவரத்துச் சேவையை உறுதிப்படுத்துவதே தமது நோக்கம் எனத் தெரிவித்துள்ள அதிகார சபையின் தலைவர், பொதுமக்கள் இவ்வாறான முறைகேடுகளைச் சந்தித்தால் தயங்காமல் முறைப்பாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
முறைப்பாடகளை முறைப்பாட்டு இலக்கம் (வட்ஸ்அப்) 071 909090 இலக்கத்துக்கு சமர்ப்பிக்கலாம்.
முறைப்பாடுகளை ஒளிப்படம் அல்லது காணொலி ஆதாரங்களுடன் சமர்ப்பிப்பது மேலதிக நடவடிக்கைகளுக்கு உதவும் என வட மாகாண ஆளுநர் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்