பழைய ஐபோன்களுக்கு ஆபத்து: அப்பிள் நிறுவனத்தின் எச்சரிக்கை!
பழைய வகை இயங்குதளங்களில் (iOS) இயங்கும் ஐபோன்களைக் குறிவைத்துத் தாக்கக்கூடிய புதிய உளவு மென்பொருள் கண்டறியப்பட்டுள்ளதால், பயனர்கள் உடனடியாகத் தங்கள் மென்பொருளைப் புதுப்பிக்குமாறு (Update) அப்பிள் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
Lookout, iVerify மற்றும் கூகுள் நிறுவனத்தின் சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் இணைந்து 'டார்க்ஸ்வேர்ட்' எனப்படும் இந்த ஆபத்தான மென்பொருளைக் கண்டறிந்துள்ளனர்.
2025 மார்ச் முதல் ஓகஸ்ட் வரை வெளியான iOS 18.4 முதல் 18.6.2 வரையிலான பழைய பதிப்புகளைப் பயன்படுத்தும் ஐபோன்கள் இதன் மூலம் பாதிக்கப்படக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது சுமார் 220 முதல் 270 மில்லியன் ஐபோன்கள் இத்தகைய பழைய பதிப்புகளில் இயங்கி வருவதாக ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
மேலும் இந்த உளவு மென்பொருள் குறிப்பாக யுக்ரைன் மக்கள், சீன கிரிப்டோகரன்சி பயனர்கள் மற்றும் சவூதி அரேபியா, துருக்கி, மலேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களைக் குறிவைத்துச் செயல்படுவது ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த மென்பொருள் மூலம் மின்னஞ்சல்கள், பயனர் பெயர்கள், கடவுச்சொற்கள், புகைப்படங்கள் மற்றும் கிரிப்டோகரன்சி வாலட்கள் போன்ற மிக முக்கியமான தரவுகளைத் திருட முடியும். இது மிகவும் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட ஒரு தளம் என்று பாதுகாப்பு வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
இது குறித்து அப்பிள் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "பயனர்கள் தங்கள் சாதனங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கச் செய்ய வேண்டிய மிக முக்கியமான விஷயம், மென்பொருளைத் தொடர்ந்து புதுப்பிப்பதாகும்," என கூறியுள்ளார்.
அப்பிளின் சமீபத்திய iOS 26 பதிப்பு இந்தத் தாக்குதல்களில் இருந்து முழுமையான பாதுகாப்பை வழங்குகிறது. அதேபோல், புதிய பதிப்பிற்கு மாற முடியாத பழைய ஐபோன் பயனர்களுக்காக, இந்த வைரஸைத் தடுக்கும் வகையில் ஒரு சிறப்புப் பாதுகாப்பு அப்டேட்டையும் அப்பிள் நிறுவனம் கடந்த வாரம் வெளியிட்டுள்ளது.
"சாதாரண பயனர்களால் இத்தகைய தாக்குதல்களைக் கண்டறிய முடியாது என்பதே இதில் உள்ள அச்சமூட்டும் விஷயம்" என்று Citizen Lab ஆராய்ச்சியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்