நாளை முதல் எரிபொருள் QR பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி - அமைச்சர் பிமல் ரத்நாயக்க உறுதி!!
எரிபொருள் கியூ.ஆர். குறியீட்டு முறைமை தொடர்பில் பொதுமக்கள் எதிர்நோக்கும் சிக்கல்களுக்கு இன்றைய தினத்திற்குள் தீர்வு வழங்கப்படும் எனவும், நாளை காலைக்குள் இப்பிரச்சினை முழுமையாகச் சீரடையும் எனவும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட வினா ஒன்றிற்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். பழைய வாகனத்தை வைத்திருந்து புதிய தொலைபேசி இலக்கத்தைப் பயன்படுத்துபவர்கள் மற்றும் பழைய தொலைபேசி இலக்கத்தை வைத்திருந்து புதிய வாகனத்தை வாங்கியவர்களுக்கே கியூ.ஆர். பெறுவதில் சிக்கல் நீடிக்கிறது.
இவர்களுக்கான தொழில்நுட்பத் தடைகள் இன்று நீக்கப்படும். பழைய வாகனம் - பழைய இலக்கம் மற்றும் புதிய வாகனம் - புதிய இலக்கம் கொண்டவர்களுக்குப் பதிவு செய்வதில் எந்தச் சிக்கலும் இல்லை. 2023 ஆம் ஆண்டில் சுமார் 70 இலட்சம் பேர் பதிவு செய்திருந்தனர்.
இந்த ஆண்டு அது 72 இலட்சமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வரை 55 இலட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். பழைய தரவு அமைப்பிலிருந்த 27 இலட்சம் தரவுகளை நீக்குவதற்கு இரண்டு நாட்கள் தேவைப்பட்டதே இந்தத் தாமதத்திற்குக் காரணம்.
சில எரிபொருள் நிலையங்களில் வழமையான விற்பனையை விட இரண்டரை மடங்கு விற்பனை பதிவாகியுள்ளது. அந்த நிலையங்களில் போதிய களஞ்சிய வசதிகள் இல்லாததால் விநியோகத்தில் அழுத்தம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் இடம்பெற்ற முறைகேடுகள் காரணமாக சில வாகனங்களுக்கு இன்னும் இலக்கத் தகடுகள் கிடைக்கவில்லை. அத்தகைய வாகன உரிமையாளர்கள் பின்வரும் ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைச் சமர்ப்பித்து எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.
வாகன வருமான வரி அனுமதிப்பத்திரம், புகைப்பரிசோதனை சான்றிதழ், வாகனப் பதிவுப் புத்தகம், காப்புறுதிச் சான்றிதழ் என்பவை அவையாகும்.
நாளை காலை முதல் நிலைமை வழமைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கிறோம்.
அதன் பின்னர் மோசடிகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக உரிய அமைச்சுக்கள் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்