பதவிக்கு அப்பாற்பட்ட மனிதாபிமானம்: மயங்கி விழுந்தவரின் உயிரை மீட்ட பொலிஸார்.
சமூகத்தில் மனிதநேயம் குறைந்து வரும் இன்றைய காலகட்டத்தில், சக மனிதனின் உயிருக்கு மதிப்பளித்து, அவரிடமிருந்த இலட்சக்கணக்கான பெறுமதியான சொத்துக்களையும் பாதுகாத்து ஒப்படைத்த தலைவாக்கலை பொலிஸாரின் செயல் பலரது பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
கடந்த சனிக்கிழமை தலைவாக்கலை நகரில் நபர் ஒருவர் திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். அவர் நீண்ட நேரமாக சுயநினைவின்றி வீதியில் கிடந்த போதிலும், அங்கிருந்த வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களோ, ஊழியர்களோ அல்லது பொதுமக்களோ அவரைக் காப்பாற்றவோ அல்லது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவோ முன்வரவில்லை என தெரியவருகின்றது.
இது குறித்து தகவல் கிடைத்ததும், தலைவாக்கலை பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி சுகத் மடுலகல்ல உள்ளிட்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
எவ்விதத் தாமதமுமின்றி, மயக்கமடைந்திருந்த நபரை முச்சக்கர வண்டி ஒன்றின் மூலம் உடனடியாக கிளங்கன் மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்ட நபரிடம் 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள், ரொக்கப்பணம் மற்றும் விலை உயர்ந்த கையடக்கத் தொலைபேசி என்பன இருந்துள்ளன.
அவற்றை மிகவும் பாதுகாப்பாக பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்ற அதிகாரிகள், அவரது உறவினர்களை நேற்று வரவழைத்து அனைத்தையும் முறையாகக் கையளித்தனர்.
பொலிஸார் உரிய நேரத்தில் காட்டிய துரித செயற்பாட்டினால், அந்த நபர் உரிய சிகிச்சை பெற்று இன்று பூரண குணமடைந்து தனது இல்லத்திற்குத் திரும்பியுள்ளார்.
கடமையை மாத்திரம் செய்யாது, மனிதநேயத்துடன் செயற்பட்ட போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் குழுவினரை அந்த நபரின் குடும்பத்தினரும் சமூக ஆர்வலர்களும் பாராட்டி வருகின்றனர்.
செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்