ஆர்ப்பாட்டங்களால் சூடாகும் குளிர்கால ஒலிம்பிக் - சுவிசிலிருந்து சண் தவராஜா

#Switzerland #Protest #America #government #Olympics
Prasu
2 hours ago
ஆர்ப்பாட்டங்களால் சூடாகும் குளிர்கால ஒலிம்பிக் - சுவிசிலிருந்து சண் தவராஜா

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் இத்தாலிய நகரான மிலானில் நடைபெற்று வரும் நிலையில் ஒலிம்பிக் போட்டிகளை எதிர்த்தும், அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றவாசிகளை வேட்டையாடிவரும் அமெரிக்காவின் குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்க முகவரகத்தை எதிர்த்தும் பரவலாக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருவதைப் பார்க்க முடிகின்றது. 

பெப்ரவரி ஆறாம் திகதி நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் அமெரிக்க வீரர்கள் மைதானத்தில் அணிவகுத்துச் சென்ற போது, அரங்கத்தில் அமர்ந்திருந்த அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் மற்றும் அவரது இணையர் உஷா வான்ஸ் ஆகியோர் பிரமாண்டமான தொலைக்காட்சித் திரையில் காட்டப்பட்டவேளை பார்வையாளர்கள் அவர்களை நோக்கி ஊழையிட்டு கிண்டல் செய்ததையும் பார்க்க முடிந்தது. அவ்வாறு நடந்து கொள்ள வேண்டாம் என ஏற்பாட்டாளர்கள் பார்வையாளர்களிடம் கோரிக்கை வைத்த போதிலும் கூக்குரல்கள் அடங்கவில்லை என்பதையும் அவதானிக்க முடிந்தது.

பெப்ரவரி 6 முதல் 22 வரை நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை எதிர்க்கும் இத்தாலியைத் தளமாகக் கொண்ட 'நிலைபேறற்ற ஒலிம்பிக் குழு' என்ற அமைப்பு போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது. 

அந்த அமைப்பைப் பொறுத்தவரை இந்தப் போட்டிகள் காலங் கடந்தவை. தற்போதைய நிலையில் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதை விடவும் இயற்கை வளங்களைக் காப்பதற்கு நாடுகள் முன்னுரிமை வழங்க வேண்டும். 

இத்தகைய போட்டிகள் நடத்தப்படுவதால் மலைவளம் உள்ளிட்ட இயற்கை வளங்கள் சேதத்துக்கு உள்ளாகின்றன என அவர்கள் கூறி வருகின்றனர். ஏழாம் திகதி சனிக்கிழமை மாலை மிகவும் அமைதியான முறையில் ஆரம்பமான ஆர்ப்பாட்டத்தில், நாடு முழுவதிலும் இருந்து வந்த மக்கள் ஆயிரக் கணக்கில் கலந்து கொண்டிருந்தனர்.

images/content-image/1771454319.jpg

வழக்கம் போல சுலோகங்களை எழுப்புதல், ஊர்வலமாகச் செல்லுதல், கொட்டொலிகளை எழுப்புதல் என ஆரம்பித்த ஆர்ப்பாட்டம் நேரம் செல்லச் செல்ல வன்முறை நிறைந்ததாக மாறியதாக காவல்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆர்ப்பாட்டம் ஒலிம்பிக் போட்டிக்கு எதிரானதாக மாத்திரமன்றி, சட்டவிரோத குடியேற்றவாசிகளுக்கு எதிராக டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் மேற்கொண்டுவரும் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிரான குரலாகவும் மாறியது.

சட்டவிரோத குடியேற்றவாசிகளைக் கட்டுப்படுத்த கொலை செய்யும் அளவுக்கு இறங்கியுள்ள அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்க முகவரகத்தைச் சேர்ந்த அதிகாரிகளும் ஒலிம்பிக் நிகழ்வுகளில் பாதுகாப்புப் பணிக்காக வந்துள்ளதாக வெளிவந்த செய்திகள் சாதாரண மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்தன.

கடந்த மாதம் அமெரிக்காவின் மின்னியாபோலிஸ் மாகாணத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட நிகழ்வில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த இத்தாலிய செய்தியாளர்கள் இருவர் குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்க முகவரக உத்தியோகத்தர்களால் தாக்கப்பட்டமை தெரிந்ததே.

இந்நிலையில், அந்த முகவரகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் ஒலிம்பிக் நிகழ்வில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுவதான செய்தி வெளியான தருணத்திலேயே யனவரி 30, 31ஆம் திகதிகளில் மிலானில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நிகழத் தொடங்கிவிட்டன. 

மிலானின் புகழ்பூத்த 'ஏப்ரல் 25 சதுக்கத்தில்' நடைபெற்ற ஆர்ப்பாட்ட நிகழ்வுகளில் ஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்டு அமெரிக்க அரசாங்கத்துக்கு எதிராகவும், குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்க முகவரகத்துக்கு எதிராகவும் கோசங்களை எழுப்பினர்.

1945ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் திகதி மிலான் சதுக்கத்தில் இருந்து முன்னெடுக்கப்பட்ட வேலை நிறுத்தம் மற்றும் ஆயுதக் கிளர்ச்சி என்பவையே இத்தாலிய சர்வாதிகாரியான முசோலினியின் பாசிச ஆட்சி தூக்கியெறியப்படவும், ஈற்றில் அவர் பொதுமக்களால் மிலான் நகரில் தூக்கிலிடப்படவும் ஆரம்பமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

images/content-image/1771454331.jpg

ஒலிம்பிக் போட்டிக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோரைக் கட்டுப்படுத்த 6,000 வரையான ஆயுதம் தரித்த காவல் துறையினரையும் இராணுவத்தினரையும் இத்தாலியின் பிரதமர் ஜோர்ஜியா மெலனி பணிக்கு அமர்த்தியிருந்தார். 

குறிபார்த்துச் சுடும் துப்பாக்கிதாரிகள் உயரமான கட்டிடங்களின் மீது நிலைகொண்டிருந்தனர். நகரம் பறப்புக்குத் தடை செய்யப்பட்ட வலயமாகப் பிரகடனம் செய்யப்பட்டிருந்தது.

வன்முறையில் ஈடுபடக்கூடும் எனக் காவல் துறையினர் சந்தேகிக்கும் எவரையும் கைது செய்து 12 மணி நேரம் வரை தடுத்து வைக்கும் அதிகாரத்தையும் அவர் வழங்கியிருந்தார்.

ஆனால், மேற்கண்ட எந்தவொரு நடவடிக்கைகளாலும் ஆர்ப்பாட்டங்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போய்விட்டது. மக்கள் மத்தியில் இருந்து வெளிப்பட்ட, குறிப்பாக அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்க முகவரக அதிகாரிகளுக்கு எதிராக வெளிப்பட்ட ஆத்திரம் கட்டுக்கடங்காமல் இருந்தது. 

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட இத்தாலிய வெளியுறவு அமைச்சர் அன்டோனியோ டஜானி, ''வருபவர்கள் நாஸிப் படையினர் அல்ல, அவர்கள் அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்க முகவரக அதிகாரிகளே" எனக் கூறி மக்களை சாந்தப்படுத்த முயன்ற போதிலும், மக்கள் அதனைக் கணக்கில் எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை. மாறாக. 

யேர்மனியில் தொழிற்சங்கவாதிகளை ஒடுக்கிய நாஸிப் படையினரையும், தற்போது அமெரிக்காவில் அராஜகம் புரியும் அமெரிக்க அதிகாரிகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சமமாகக் கருதியதையே பார்க்க முடிந்தது.

ஒலிம்பிக் போட்டிகள் தொடர்பான செய்திகளை விடவும், ஆர்ப்பாட்டங்கள் தொடர்பான செய்திகளே அதிகமாக ஊடகக் கவனத்தைப் பெற்ற நிலையில், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைகளில் ஈடுபட்டோர் ''இத்தாலி நாட்டினதும் இத்தாலிய மக்களினதும் எதிரிகள்" என பிரதமர் மெலனி கூறியிருந்தார்.

images/content-image/1771454352.jpg

பொதுவான விடயங்கள் தொடர்பில் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தும் விதத்தில் ஆர்ப்பாட்டங்களை நடத்துதல் மக்களின் ஜனநாயக உரிமைகளுள் ஒன்று. மக்களின் கோரிக்கைகள் தங்களுக்கு உகந்தனவாக இல்லை என உணரும் ஆட்சியாளர்கள் மக்களை ஜனநாயக விரோதிகளாகச் சித்திரிப்பதும், அவர்கள் மீது அடக்குமுறையை ஏவி விடுவதும் உலகப் பொது விதியாக உள்ளதைப் பார்க்க முடிகின்றது.

'ஜனநாயகத்தின் தொட்டில்' எனப் பெருமையுடன் வர்ணிக்கப்படும் ஐரோப்பிய நாடுகளிலும் இதே போன்ற விமர்சனங்கள் ஆட்சியாளர்களால் முன்வைக்கப்படுவதை என்னவென்று எடுத்துக் கொள்வது? அமெரிக்காவில் மாநில சட்ட திட்டங்களைப் புறந்தள்ளி, குடியேற்றவாசிகளுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்க முகவரகத்துக்கு எதிராக மிலான் நகர வீதிகளில் மாத்திரம் எதிர்ப்புத் தெரிவிக்கப்படவில்லை.

மாறாக, ஒலிம்பிக் மைதானத்திலும் பல போட்டியாளர்கள் தங்கள் எதிர்ப்பையும், அதிருப்தியையும் பதிவு செய்துள்ளார்கள். அமெரிக்காவைப் பிரதிநிதித்துவம் செய்யும் பனிச்சறுக்கு வீரரான ஹன்ரர் ஹெஸ் என்பவரிடம் குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்க முகவரகத்தின் அண்மையச் செயற்பாடுகளை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்குப் பதிலளித்த அவர், ''நான் அமெரிக்கக் கொடியைத் தாங்கியிருக்கிறேன் என்பதனால் அமெரிக்காவில் நடைபெறும் அனைத்து விடயங்களையும் நான் ஏற்றுக் கொள்கிறேன் என அர்த்தமாகாது" எனக் கூறியுள்ளார்.

மற்றொரு அமெரிக்கப் பனிச்சறுக்கு வீரரான கிறிஸ் லில்லிஸ், குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்க முகவரக நடவடிக்கைகள் காரணமாக தான் மனமுடைந்து போயுள்ளதாகக் கூறியுள்ளார். ''ஒரு நாடாக நாங்கள் அனைத்து மனிதர்களினதும் உரிமைகளை மதிக்க வேண்டும். 

எங்கள் குடிமக்களாக இருந்தாலும், வேறு யாராக இருந்தாலும் அவர்களை அன்புடனும் மரியாதையுடனும் நடத்த வேண்டும். போட்டிகளைப் பார்வையிடுவோர், நாங்கள் பிரதிநிதித்துவம் செய்ய விரும்பும் அமெரிக்கா எது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்" என அவர் தெரிவித்தார்.

இவர்களின் கருத்துக்கு மிகவும் காட்டமான பதிலடியை ட்ரம்ப் கொடுத்துள்ளார். ''ஹன்ரர் ஹெஸ் ஒரு தோல்வியடைந்த நபர்" எனத் தெரிவித்துள்ள ட்ரம்ப், ''அவர் தற்போதைய குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் தனது நாட்டை (உண்மையாக) பிரதிநிதித்துவம் செய்யவில்லை" எனக் கூறியுள்ளார்.

மக்களின் உண்மையான உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடியாத தலைவர்களாகவே ட்ரம்ப், மெலனி போன்றவர்கள் உள்ளதைப் பார்க்க முடிகின்றது. ட்ரம்பின் அண்மைக் கால நடவடிக்கைகள் அவருக்கு உள் நாட்டில் மட்டுமன்றி வெளி நாடுகளிலும் கண்டனங்களைத் தோற்றுவித்து உள்ளதைப் பார்க்க முடிகின்றது. 

அயல் நாடுகளை மாத்திரமன்றி அவர் ஐரோப்பிய நாடுகளைக் கையாளும் முறைமையும் ஐரோப்பிய மக்கள் மத்தியில் விசனத்தைத் தோற்றுவித்து உள்ளது. 

அவரின் செல்வாக்கு உலகம் முழுவதிலும் வேகமாக வீழ்ச்சி கண்டு வருகின்றது. மக்களே வரலாறைப் படைக்கிறார்கள் என்ற உலகளாவிய தத்துவத்தை மறந்துவிட்டுப் பேசும் இது போன்ற தலைவர்களுக்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும். அதுவரை கலகக் குரல்கள் - கண்டங்கள் கடந்தும் - ஒலித்துக் கொண்டே இருக்கும் என்பதே யதார்த்தம்.

செய்தி: சண். தவராசா. சுவிஸ்

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!