இலங்கையின் மீள்சுழற்சி நிதியத்திற்கான உலகளாவிய தமிழர் தொண்டு நிறுவனங்களின் ஒன்றியத்தின் அங்குரார்ப்பணம்
தமிழர் தாயகத்தின் அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்டு, உலகளாவிய தமிழர் தொண்டு நிறுவனங்களும் சமூக அமைப்புகளும் இணைந்து முன்னெடுக்கவுள்ள கூட்டுச் செயற்றிட்டம் ஒன்று, குவியம் அமைப்பின் ஏற்பாட்டில், கடந்த 07-02-2026 சனிக்கிழமையன்று இங்கிலாந்தில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
இலங்கையிலும் ஐக்கிய இராச்சியத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ள தொண்டு நிறுவனமான குவியம் முன்மொழிந்த இந்த முயற்சியின் கீழ், பல நாடுகளில் இயங்கி வரும் தமிழர் தொண்டு நிறுவனங்களும் சமூக அமைப்புகளும் இணைந்து, வாழ்வாதார அபிவிருத்திக்கான மீள்சுழற்சி நிதியம் (Livelihood Recovery Revolving Fund) ஒன்றை உருவாக்கி நடைமுறைப்படுத்துவதற்கான ஒன்றியம் ஒன்றை நிறுவியுள்ளன.
போருக்குப் பின்னரான கடந்த 16 ஆண்டுகளில் பல தொண்டு நிறுவனங்கள் தனித்தனியாக மேற்கொண்ட அபிவிருத்தி முயற்சிகள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்திருந்தாலும், ஒருங்கிணைப்பு குறைவால் வளங்களும் அனுபவங்களும் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை.
இந்நிலையில், இக்கூட்டுச் செயற்றிட்டம் ஒருங்கிணைந்த முறையில், நிலைபேறான மற்றும் வினைத்திறன் மிக்க கிராமிய வாழ்வாதார அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மீள்சுழற்சி நிதி என்ற எண்ணக்கருவின் அடிப்படையில் அமைந்த இந்தத் திட்டம், நன்கொடையாளர்களின் நிதி உதவிகளை ஒரே குடும்பத்துடன் நிறுத்தாமல், விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன்பிடி மற்றும் சிறு கைத்தொழில்கள் போன்ற துறைகளில் பல குடும்பங்களுக்கு, பல ஆண்டுகளுக்கு சுழற்சி முறையில் தொடர்ந்து வழங்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம், தாயகத்தில் வெற்றிகரமாகச் செயற்பட்டுவரும், தெரிவு செய்யப்பட்ட கூட்டுறவு அமைப்புகளினூடாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
திட்டத்தை முன்னெடுக்கும் பொறுப்பு, தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளும் துறைசார் நிபுணர்களும் அடங்கிய வழிநடத்தல் குழுவிடம் (Steering Committee) ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது எந்த ஒரு தனிப்பட்ட அமைப்பினதும் திட்டமல்ல; மாறாக, ஒன்றியத்தின் வழிநடத்தல் குழுவின் கூட்டு முயற்சியாகவே முன்னெடுக்கப்படும்.
இந்த வழிநடத்தல் குழுவின் தலைவராக, திரு. வல்லிபுரநாதன் சந்திரநாதன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கூட்டுறவு அமைப்புகள் ஊடான அபிவிருத்திச் செயற்பாடுகளில் நீண்ட அனுபவம் கொண்ட அவர், நெதர்லாந்தை தளமாகக் கொண்ட மனித நேய செயற்பாடுகளுக்கான கூட்டுறவுச் சங்கத்தின் பிரதிநிதிகளில் ஒருவராகவும் செயற்படுகிறார்.
தமிழ்ச் சமூகத்தில் ஒன்றிணைந்த செயற்பாடுகளை அனைவரும் எதிர்பார்த்திருக்கும் ஒரு பின்புலத்தில், இந்தச் செயற்றிட்டத்திற்கு பரந்த ஆதரவை வழங்குமாறு குவியம் அனைத்து தரப்பினரையும் அழைத்துள்ளது.
(வீடியோ இங்கே )