சட்டவிரோத மணல் அகழ்வு - கிளிநொச்சி மக்கள் விடுத்துள்ள கோரிக்கை!
கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட வெளிகண்ட்டல் ஆற்றுப்பகுதி மற்றும் வயல்ப் பகுதிகளில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருகிறது.
டிட்வா புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் கண்டவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள ஆற்றுப் படுக்கை மற்றும் வயல் பகுதிகளில் தேங்கிக் கிடக்கும் மணல்களை சட்டவிரோதமான முறையில் அகழும் நடவடிக்கையில் சில தரப்பினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு அகழப்படும் மணல்கள் இரவு வேளைகளில் உழவு இயந்திரத்தின் மூலம் வேறு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் டிப்பர் வாகனம் மூலம் எந்தவித அனுமதியும் இன்றி பல்வேறு பகுதிகளுக்கு விநியோகிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே குறித்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொது அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.