மண்மேட்டில் மோதிய பேருந்து; அதிர்ஷ்டவசமாக தப்பிய பயணிகள்!
கட்டுப்பாட்டையிழந்த பேருந்து மண்மேட்டுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்துச் சம்பவம் ஹட்டன்- கொழும்பு பிரதான சாலையில் உள்ள கினிகத்தேன கடவல பகுதியில் உள்ள மஹா வாங்குவா பகுதியில் இன்று (26) அதிகாலை 5:30 மணியளவில் நிகழ்ந்தது. தலவாக்கலையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கடவத்த அரச போக்குவரத்து சபை டிப்போ பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்திற்குள்ளானதாக கினிகத்தேன போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
பேருந்து வளைவில் செல்ல முயன்றபோது, பேருந்தை கட்டுப்படுத்த இரண்டாவது கியரை மாற்றியதாகவும், அந்த நேரத்தில் பேருந்தின் பிரேக்கிங் சிஸ்டம் செயலிழந்ததால், பிரேக்குகளைப் பயன்படுத்தி ஒரு சாய்வான பகுதியில் உள்ள ஒரு மலையில் சென்று பேருந்தை நிறுத்தியதாகவும் குறித்த பேருந்தின் சாரதி மகேஷ் சுதர்சன் (49) தெரிவித்தார்.
விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் சுமார் 80 பயணிகள் இருந்தனர். எனினும் எவருக்கும் காயமின்றி அதிர்ஸ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். விபத்தையடுத்து பேருந்தின் சாரதி மற்றும் நடத்துநர் அந்தப் பயணிகளை வேறொரு பேருந்தில் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்தனர்.
விபத்து குறித்து கினிக்கத்தேன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பணிப்பின் பேரில் கினிக்கத்தேன பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்