ஓமனில் இருந்து இலங்கை வந்தவர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கைது!
82.2 மில்லியன் மதிப்புள்ள 'குஷ்' கஞ்சாவை நாட்டிற்குள் கடத்த முயன்ற நபர் ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் (PNB) அதிகாரிகள் இன்று (25) காலை சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
சந்தேகநபரின் உடமைகளை சோதனை செய்தபோது அவரின் இரண்டு கைப் பைகளுக்குள் எட்டு பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 8 கிலோகிராம் 220 கிராம் 'குஷ்' கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று காலை ஓமானின் மஸ்கட்டில் இருந்து நாட்டிற்கு வருகை தந்ததாகவும், இரவு விடுதியொன்றில் தனியார் பாதுகாப்புப் பணியாளராகப் பணியாற்றுபவர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களும் மேலதிக விசாரணைகளுக்காக நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளன.