குறுகிய பயணம் ஒன்றை மேற்கொண்டு நாடு திரும்பினார் சீன வெளியுறவு அமைச்சர்!
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி சிறிலங்காவுக்கு குறுகிய பயணம் ஒன்றை மேற்கொண்டு விட்டு பீஜிங்கிற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
நான்கு ஆபிரிக்க நாடுகளுக்கான பயணத்தை மேற்கொண்டிருந்த சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, அந்தப் பயணத்தை முடித்துக்கொண்டு தென்னாபிரிக்காவின் டர்பனில் இருந்து பீஜிங் புறப்பட்டார்.
வழியில் அதிகாலை 1.05 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி மற்றும் 17 பேர் கொண்டு உயர் அதிகாரிகள் குழுவை சீனத் தூதுவர் கீ சென்ஹொங் மற்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.
இதையடுத்து காலை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்துப் பேசிய சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, இன்று பிற்பகல் பீஜிங்கிற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். சீன வெளியுறவு அமைச்சருடனான சந்திப்பு குறித்து சிறிலங்கா வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
“சிறிலங்காவுக்கு இன்று காலை ஒரு குறுகிய பயணத்தை மேற்கொண்டிருந்த சீன மக்கள் குடியரசின் வெளியுறவு அமைச்சர் வாங் யியை சந்தித்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
வர்த்தகம் மற்றும் முதலீடு, அபிவிருத்தி ஒத்துழைப்பு மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து எங்களின் கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டது. டிட்வா சூறாவளிக்குப் பின்னர் சிறிலங்காவை மீளக்கட்டியெழுப்புவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
பாதிக்கப்பட்ட வீதிகள் , தொடருந்து பாதை மற்றும் பாலங்களை புனரமைத்தல் உள்ளிட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு சீன அரசாங்கத்தின் உதவியை கோரினேன். சீன அமைச்சர் வாங் யி, இந்தக் கோரிக்கையில் தனது தனிப்பட்ட கவனத்தைச் செலுத்துவதாக உறுதிசெய்தார்.
சிறிலங்கா விரைவில் மீட்சி பெறுவதற்கான சரியான பாதையில் செல்கிறது என்றும் நம்பிக்கை தெரிவித்த அவர், சீன அரசாங்கத்தின் முழு ஆதரவையும் மீண்டும் உறுதிப்படுத்தினார்,” என்று விஜித ஹேரத் அந்தப் பதிவில் கூறியுள்ளார்.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்