கேள்விக்கு இலக்காகும் ட்ரம்பின் வெளியுறவுக் கொள்கை

#America #Trump
Mayoorikka
1 hour ago
கேள்விக்கு இலக்காகும் ட்ரம்பின் வெளியுறவுக் கொள்கை

உலக நாடுகளில் பலவந்தமாக ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்தும் அமெரிக்காவின் சரித்திரம் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் காலத்தில் முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க உளவுத்துறைத் தலைவர் ருல்சி கப்பார்ட் தெரிவித்து உள்ளார்.

 நவம்பர் முதலாந் திகதி பஹ்ரைனில் நடைபெற்ற 21ஆவது மனாமா டயலொக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்து உள்ளார். அவர் கூறியது உண்மையானால் அது உலகுக்கு ஒரு நல்ல சேதியாக அமையும். 

ஆனால், அமெரிக்காவின் நீண்ட நெடிய வரலாற்றையும், தற்போதைய அதிபர் ட்ரம்பின் போக்கையும் நன்கு அறிந்தவர்களுக்கு இந்தச் சேதியை ஏற்றுக் கொள்வது கடினமாகவே இருக்கும் என்பதே உண்மை. இருபதாம் மற்றும் இருபத்தியோராம் நூற்றுண்டுகளில் அமெரிக்க வரலாறானது உலகின் பல நாடுகளிலும் நிகழ்த்தப்பட்ட ஆட்சி மாற்றங்களின் சரித்திரமாகவே இருந்து வந்துள்ளது. 

குறிப்பாக இரண்டாம் உலகப் போரின் பின்னான காலப்பகுதியில் அமெரிக்கா நேரடியாகவும், மறைமுகமாகவும் உலகின் பல நாடுகளிலும் தலையீடு செய்திருக்கின்றது. இதன் காரணமாக பெரும் போர்கள் நடைபெற்று உள்ளன. 

பெறுமதியான மனித உயிர்கள் பலியாகிப் போயுள்ளன. இலட்சக்கணக்கான மக்கள் உள்நாடுகளிலும், வெளிநாடுகளிலும் அகதிகளாக மாறினர். போர்களின் விளைவான சொத்து இழப்பு மற்றும் கட்டமைப்பு அழிவுகள் விவரிக்க முடியாதவை. 

அது மாத்திரமன்றி, அமெரிக்க எதிர்ப்புக் கொள்கைகளுடன் கூடிய அல்-கைதா, ஐ.எஸ்.எஸ். உள்ளிட்ட பயங்கரவாதக் குழுக்களும் உருவாகி உலகைக் கலங்கச் செய்து வருகின்றன. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தனது நோக்கத்தை அமெரிக்கா நிறைவேற்றிக் கொண்டுள்ளது.

 ஆட்சியாளர்கள் எத்தகைய கொடூரங்களைப் புரிபவர்களாக இருந்தாலும் பரவாயில்லை, தனது நலன்களைப் பேணும் வகையில் நடந்து கொண்டால் போதும் என்ற அமெரிக்காவின் கொள்கையின் விளைவாக உலகம் பல சர்வாதிகாரிகளைப் பார்க்க நேர்ந்தது. 

மனித உரிமைகளைப் பேணுதல், அமெரிக்காவின் நலன்களை உறுதி செய்தல் என்ற சொல்லாடல்களில் தன்னை மறைத்துக் கொண்டு அமெரிக்கா தலையிட்ட நாடுகளில் சர்வாதிகாரிகள் ஆட்சிபீடத்தில் அமர வைக்கப்பட்டார்கள். 

ஒரு காலத்தில் பயங்கரவாதிகள் என அமெரிக்க வரையறை செய்து வைத்திருந்த நபர்களோடு கூட கைகோர்த்துக் கொண்டு தனது நோக்கத்தை நிறைவேற்றிய சந்தர்ப்பங்களும் உண்டு. 2003ஆம் ஆண்டில் நிகழ்ந்த ஈராக் மீதான படையெடுப்பு, 2011இல் லிபியா மீதான படையெடுப்பு, 2014இல் உக்ரைனில் நடைபெற்ற ஆட்சிக் கவிழ்ப்பு, சிரியா, ஆப்கானிஸ்தான் என அமெரிக்கத் தலையீடுகளின் பட்டியல் மிக நீளமானது. ஈராக்கில் இன்றளவும் வன்முறைகள் ஓய்ந்த பாடாக இல்லை. லிபியாவில் இன்றுவரை ஒரு நிலையான அரசாங்கத்தை அமைக்க முடியாமல் உள்ளது.

 போட்டிக் குழுக்களின் கைகளில் சிக்கியுள்ள நாடு, ஒப்பீட்டு அடிப்படையில் அமைதியாகத் தென்பட்டாலும் வன்முறைகள் தொடரவே செய்கின்றன. தற்போது கூட ஈரானிலும், வெனிசுவேலாவிலும் ஆட்சிக் கவிழ்ப்புகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபட்டு வருகின்றமை ஒன்றும் இரகசியமான விடயமல்ல.

 இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானில் விமானத் தாக்குதல்களை மேற்கொண்ட அமெரிக்கா, அந்த நாட்டின் மீது அளவுக்கு அதிகமான பொருளாதாரத் தடைகளை விதித்து உள்ளது. வெனிசுவேலா மீது ஒரு இராணுவ முற்றுகையை அமெரிக்கா நடைமுறைப்படுத்தி வருவதைப் பார்க்க முடிகின்றது. போதைப் பொருள் ஒழிப்பு என்ற சொல்லாடலின் கீழ் அமெரிக்கா மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் அந்த நாட்டில் ஒரு ஆட்சி மாற்றத்தை விரும்பும் அமெரிக்காவின் செயற்பாடுகளே என்பது பட்டவர்த்தனமாகத் தெரிகின்றது.

 இத்தகைய பின்னணியில் கப்பார்ட் அம்மையரின் கருத்து வெளியாகி உள்ளமை விவாதப் பொருளாக மாறியுள்ளது. இராணுவத்தின் துணை கொண்டு ஆட்சிக் கவிழ்ப்புகளை மேற்கொள்வதை விடவும் இராஜதந்திர முயற்சிகளுக்கும், பரஸ்பர ஒப்பந்தங்களுக்கும் ட்ரம்ப் நிர்வாகம் முன்னுரிமை அளித்து வருவதாக அவர் கூறியுள்ளார். 

வாஷிங்ரனின் பழைய சிந்தனைப் போக்கு எங்களைப் பின்னோக்கிப் பிடித்து வைத்துள்ளது. நீண்ட காலத்துக்கு, பல பத்தாண்டுகளுக்குப் பின்னோக்கிப் பிடித்து வைத்துள்ள இந்தப் போக்கு பல பாதகமான விளைவுகளைத் தந்துள்ளது. 

அனைத்து இடங்களுக்கும் ஒத்துவரக்கூடிய ஒரே மாதிரி எனக் கருதப்பட்ட அணுகுமுறை மூலமான செயற்பாடுகள் நண்பர்களை விடவும் எதிரிகளையே அதிகம் உருவாக்கி வைத்துள்ளன. அமெரிக்க வரியிறுப்பாளர்களின் ட்ரில்லியன் கணக்கான டாலர்கள் இதற்காகச் செலவிடப்பட்டுள்ளதுடன், எண்ணிக்கையில்லாத உயிர் இழப்புகள் ஏற்பட்டதுடன் புதிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் உருவாகி உள்ளன. இவற்றை இல்லாமல் செய்யும் நோக்குடனேயே ட்ரம்ப் தேர்வு செய்யப்பட்டார் என்கிறார் அவர்.

 பதவியேற்ற முதல்நாள் தொடக்கம் தனித்துவமான ஒரு வெளியுறவுக் கொள்கையை அவர் பின்பற்றி வருகிறார். சாத்தியமான, இணக்கப்பாட்டுடன் கூடிய ஒரு கொள்கையாக அது உள்ளது. ஜனாதிபதி ட்ரம்பின் அமெரிக்கா முதலில் என்ற கொள்கை இராஜதந்திரத்தின் ஊடாக சமாதானத்தைக் கட்டியெழுப்பும் நடவடிக்கையாக உள்ளது என்கிறார் அவர். இராஜதந்திரச் சொல்லாடல்களில் வார்த்தைகளுக்கு எப்போதுமே ஒரு முக்கியத்துவம் இருந்து வந்திருக்கிறது. 

உலக அரங்கில், பொதுவெளியில், முக்கியத்துவம் வாய்ந்த நபர்களால் முன்வைக்கப்படும் வார்த்தைகள் பெறுமதி வாய்ந்தவையாக நோக்கப்படுகின்றன. கப்பார்ட் அம்மையாரின் வார்த்தைகளுக்கும் அத்தகைய பெறுமானம் உள்ளது. அமெரிக்காவின் கடந்தகாலம் தொடர்பில் அவர் வழங்கியுள்ள ஒப்புதல் வாக்குமூலம் கவனத்தில் கொள்ளத்தக்கது. அமெரிக்கா கடந்த காலத்தில் மிக மோசமாக நடந்து கொண்டுள்ளது என்பதை அவர் ஒப்புக் கொண்டுள்ள போதிலும், கடந்த காலச் சம்பவங்கள் எதற்குமே தனது வருத்தத்தை அவர் பதிவு செய்யவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

 ட்ரம்பின் வெளிநாட்டுக் கொள்கை தொடர்பாக கப்பார்ட் அவர்கள் பகிரங்கமாகக் கருத்துத் தெரிவித்து உள்ள போதிலும், அதன் நம்பகத்தன்மையை பலரும் கேள்விக்கு உட்படுத்தி உள்ளனர். அமெரிக்காவின் நலன் என்ற விடயத்தை வலியுறுத்தியே அந்த நாட்டின் செயற்பாடுகளை ஆட்சியளார்கள் நியாயப்படுத்தி வருவதைப் பார்க்கிறோம். 

அமெரிக்காவின் நலன் என்பது உண்மையில் யாரின் நலன்? அந்த நாட்டில் வாழும் சாதாரன குடிமக்களின் நலனா? அல்லது அரசியல் கட்சிகளின் நலனா? இல்லை, பெரு முதலாளிகளின் நலனா? ஜனநாயக நாடுகள் எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் நாடுகளின் அரசாங்கங்கள் தமது குடிமக்களின் நலன்களை விடவும் அதிக முக்கியத்துவத்தை பெரு வணிகர்களுக்கே வழங்கி வருகின்றன என்பதே இன்றைய யதார்த்தமாக உள்ளது. மூன்றாம் உலக நாடுகளில் மேலதிகமாக உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற நிறுவனங்களின் சொல் கேட்டு நடக்க வேண்டிய நிர்ப்பந்தத்திலேயே அரசாங்கங்கள் உள்ளன. 

இந்த நிறுவனங்கள் ஏகாதிபத்திய நாடுகளின் ஊதுகுழல்களாக உள்ள நிலையில் அவை கூட பன்னாட்டு பெரு வணிகர்களின் நலன்களையே பிரதிநிதித்துவம் செய்வன என்பதையும் புரிந்துகொள்ள முடியும். இது தவிர, ட்ரம்ப் அவர்களின் தனிப்பட்ட குணநலன்கள் புரிந்து கொள்ளப்பட முடியாதவையாக உள்ளன. அவர் தனது ஆலோசகர்களின் பரிந்துரைகளை முழுவதுமாக ஏற்றுக் கொண்டு நடப்பவராகத் தெரியவில்லை.

 பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவரது முடிவுகள் தனிப்பட்ட முடிவுகளாகவே தென்படுகின்றன. கப்பார்ட் அவர்களைப் பதவியில் அமர்த்துவது தொடர்பான அவரது முடிவு கூட அத்தகையதே. இந்நிலையில் கப்பார்ட் அவர்களின் கருத்தைக் கூட அவர் முழுவதுமாக வழிமொழிவாரா என்ற கேள்வியும் தொக்கி நிற்கிறது.

 கப்பார்ட் அவர்களின் கருத்தை ட்ரம்ப் முழுவதுமாக ஏற்று நடப்பாராயின் அது ஒட்டுமொத்த உலகத்துக்குமே நன்மை பயக்கும். ட்ரம்ப் அவ்வாறு தனது பதவிக் காலம் முழுமைக்கும் நடந்து கொள்வாரா என்பதே பெறுமதியான கேள்வி. கப்பார்ட் சொன்னதைப் போல ட்ரம்ப் தனது ஆட்சிக் காலத்தில் நடந்து கொண்டால் முழு உலகுக்குமே நல்லது. நல்லது நடக்கும் என்று நம்புவதைத் தவிர செய்யக் கூடியது வேறொன்றும் இல்லை.

-சுவிசிலிருந்து சண் தவராஜா-

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

அனுசரணை

images/content-image/1754511373.jpg


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!